மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

ஈரோட்டின் டி.எம்.சவுந்தரராஜன் - தேவிபாரதி

ஈரோட்டின் டி.எம்.சவுந்தரராஜன் - தேவிபாரதி

மக்களின் வாழ்வுடன் கலந்த சினிமாப் பாடல்கள் - சினிமா பாரடைசோ! பகுதி - 10

வீடுகள் மேலும் மேலும் சினிமாவின் தாக்கத்துக்குள்ளாகிக் கொண்டிருந்தன. சினிமாப் பாடல்களைக் கேட்பது அவற்றைப் பார்ப்பதைவிட ஆர்வமூட்டக்கூடிய விஷயமாக மாறிக்கொண்டிருந்தது. டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி, கண்டசாலா, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், சந்திரபாபு போன்றவர்களின் திரையிசைப் பாடல்களுக்கு மக்கள் மயங்கிக் கிடந்தார்கள்.

டூரிங் டாக்கீஸ்களில் படம் திரையிடப்படுவதற்கு முன் கால் மணி நேரத்திற்கு முன்பாகப் பாடல்களை ஒலிக்கச் செய்வார்கள். கொட்டகையின் சிரசில் அதற்கென நான்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருக்கும். சரியாக ஆறரை மணிக்கு விநாயகனே வினை தீர்ப்பவனே என்னும் பக்திப் பாடலோடு ரெக்கார்ட் போடத் தொடங்கிவிடுவார்கள். அவல் பூந்துதுறை டென்ட் கொட்டகையிலிருந்து மூன்று நான்கு கிலோமீட்டர் தூரத்தை அநாயசமாகக் கடந்து சுற்றிலுமிருந்த எல்லா கிராமங்களிலும் பரவி ஒலிக்கும் அந்தப் பாடல்களைத் தம் அன்றாட வேலைகளினூடே செவிகளைத் திறந்துவைத்துக் கேட்டு ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

விநாயகர் துதியைத் தொடர்ந்து முருகன் துதி, சரஸ்வதி துதி, அம்மன் துதி என இரண்டு மூன்று பக்திப் பாடல்களுக்குப் பிறகு திரையிடப்பட்டிருக்கும் படத்துக்குத் தகுந்தவாறு எம்.ஜி.ஆர்., அல்லது சிவாஜி பாடல்களை ஒலிபரப்புவார்கள்.

தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள் எனப் பாடல்களை வகை பிரித்துத் தேர்ந்தெடுக்கும் வல்லமை டூரிங் டாக்கீசுகளுக்கு இருந்தது.

நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

கல்யாண நாள் பார்த்துச் சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

இந்தப் புன்னகை என்ன விலை?

காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊரறிந்த உண்மை

வாடிக்கை மறந்தது ஏனோ, என்னை வாட்டிட ஆசைகள்தானோ

தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?

சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் நீ மாம்பழம் வேண்டுமென்றாய்

என விதவிதமாக ஒலித்த திரையிசைப் பாடல்களைக் கேட்டு மனப்பாடம் செய்துகொண்டவர்கள் இருந்தார்கள்.

வயல்களிலும் காடுகரைகளிலும் களையெடுக்கும்போதும் நாற்று நடும்போதும் பெண்கள் பாடிக்கொண்டிருந்த நாட்டுப்புறப் பாடல்களின் இடத்தைத் திரையிசைப் பாடல்கள் நிரப்பத் தொடங்கின. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் மயங்கிவிட்டேன் தோழி என்றோ, எண்ண எண்ண இனிக்குது, ஏதேதோ நினைக்குது வண்ண வண்ணத் தோட்டங்கள் அஞ்சு ரூபா என்றோ களையெடுக்கும் இளம்பெண்ணொருத்தி பாடுவதைக் கேட்டு கிராமத்தின் வயதான பெண்கள் திகைத்துப் போனார்கள்.

ஆண்கள் கடவுளென்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி என உரத்த குரலில் பாடிக்கொண்டே உழவு மாடுகளை விரட்டினார்கள், மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார், அன்பே ஆரிராரோ, ஆரி ராரோ எனத் தொட்டிலை ஆட்டினார்கள்.

மக்கள் டூரிங் டாக்கீஸ் இசைத்தட்டுகளிலிருந்து பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றை மனப்பாடம் செய்த துல்லியமாக அவற்றின் தொனியைப் பிடித்துக்கொண்டு அசல் பாடல்களின் அதே ராகத்துடன் பாடவும் தொடங்கினார்கள்.

அந்தச் சமயத்தில்தான் டிரான்சிஸ்டர்களும் அறிமுகமாகத் தொடங்கின.

ஊரில் இரண்டொருவர் வானொலிப் பெட்டிகளையும் ரெக்கார்ட் பிளேயர்களையும் வைத்திருந்தார்கள். வானொலிப் பெட்டிகளிலிருந்து இலங்கை வானொலியின் தென்கிழக்கு ஆசிய வர்த்தக சபை வழங்கிய திரையிசைப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது அவை பெரிய ஆடம்பரமாகக் கருதப்பட்டன. விலையும் அதிகம். அது போன்ற சூழலில் அறிமுகமான டிரான்சிஸ்டர்கள் திரையிசைப் பாடல்களின் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தன.

மர்பி நிறுவனத்தின் டிரான்சிஸ்டர்கள். அவையும் அவ்வளவு மலிவான விலை கொண்டவை அல்ல. குறைந்தபட்சம் நூறு ரூபாய். அப்போது அரசு ஊழியர் ஒருவரின் மாத ஊதியம் எழுபது ரூபாய், ஒரு பவுன் தங்கம் 90 ரூபாய். டிரான்சிஸ்டர்களைத் தவணைத் திட்டத்தில் வாங்க முடிந்ததால் சிலரது வீடுகளில் டிரான்சிஸ்டர் வந்தது. ஆல் இண்டியா ரேடியோவின் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வரை திரையிசைப் பாடல்களை ஒலிபரப்புவார்கள், இலங்கை வானொலியிலிருந்து நாளின் பெரும்பாலான நேரங்களில் பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அவற்றைக் கேட்பதற்காகக் காடு கரைகளுக்கும் தறிக்கூடங்களுக்கும் டிரான்சிஸ்டர்களைக் கொண்டு செல்வார்கள். பாட்டுக் கேட்டுக்கொண்டே உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்துகொண்டிருந்தது தமிழ்ச் சமூகம்.

பாடல்களைத் தவிர ஒலிச்சித்திரங்களும் ஒலிபரப்பப்பட்டன. இன்றைய தலைமுறையால் கற்பனை செய்ய முடியாத விஷயம் அது. திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்களையும் பாடல்களையும் பின்னணி இசையோடு அப்படியே பதிவு செய்து ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி தொடங்கி இறுதிக் காட்சி வரை ஏறத்தாழ ஒன்றரை மணி நேர ஒலிபரப்பு. அவ்வளவாக முக்கியமில்லாதவை எனக் கருதும் சில காட்சிகளை நீக்கிவிடுவார்கள். டிரான்சிஸ்டரை தலைமாட்டில் வைத்துக்கொண்டு ஒலிச்சித்திரம் கேட்டுக்கொண்டே கால்களை ஆட்டிக்கொண்டே பகல் தூக்கம் போடக் கிடைத்த அற்புதமான காலம் அது.

முப்பது நாற்பதாண்டு காலத்திய தமிழ் சினிமாவின் பாடல்களையும் இசையையும் வசனங்களையும் இடைவிடாமல் கேட்டு வளர்ந்த தமிழ்ச் சமூகம் திரைப்படத் துறையைச் சார்ந்த ஒவ்வொருவரையும் கொண்டாடி மகிழ்வதற்குப் பின்னால் இதைவிட நீண்ட வரலாறு உண்டு.

திரையிசைக்குக் கிடைத்த வரவேற்புதான் இசைக் கச்சேரிகள் உருவாகக்கூடக் காரணம் எனச் சொல்லலாம். இசை என்றால் திரை இசைதான். கர்னாடக சங்கீதமோ, சாஸ்திரிய சங்கீதமோ அல்ல. முழுக்க முழுக்க சினிமாப் பாடல்கள்தாம். திருவிழா நாடகங்களின் இடத்தைப் பாட்டுக் கச்சேரிகள் கைப்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஈரோட்டிலும் கரூரிலும் உள்ளூர்ப் பாடகர்களைக் கொண்ட பல இசைக்குழுக்கள் உருவாகத் தொடங்கின. ஒவ்வொரு குழுவிலும் டி.எம்.சவுந்தரராஜன்களும் சிதம்பரம் ஜெயராமன்களும் பி.சுசீலாகளும் எல்.ஆர்.ஈஸ்வரிகளும் இருந்தார்கள். மிருதங்கம், தபேலா, வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற ஒரு கருவி தவிர மௌத் ஆரன் போன்ற இசைக் கருவிகளும் இருந்தன. அவற்றை இசைக்கத் தெரிந்த உள்ளூர் இசைக் கலைஞர்கள் இருந்தார்கள்.

பராசக்தியிலிருந்து பட்டிக்காடா பட்டணமா வரை, ஆயிரத்தில் ஒருவனிலிருந்து அடிமைப் பெண் வரை, மணாளனே மங்கையின் பாக்கியத்திலிருந்து பணமா பாசமா வரை, சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஜெய்சங்கர் முதலான முன்னணி நாயகர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை தொனி பிசகாமல் பாடுவதற்கான பயிற்சி பெற்ற இசைக் கலைஞர்கள்.

திருவிழாக் காலங்களில் அவற்றின் ஒருபகுதியாக பாட்டுக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. நாடகம் நடத்துவதற்கான மேடைகளிலேயே பாட்டுக் கச்சேரிகளுக்கும் இடம் கிடைத்தது. விழா நாட்களில் இரவு பத்து, பத்தரை மணிக்குக் கச்சேரி தொடங்கும். தம் இசைக் கருவிகளோடு வாகனங்களில் வந்து ஊருக்குள் இறங்கும் இசைக் கலைஞர்களை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். இசைக் கருவிகளையும் மைக்குகளையும் பொருத்தி மேடையைத் தயார்படுத்துவதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஹலோ மைக் டெஸ்டிங், ஹலோ ஹலோ என்ற அறிவிப்பு திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கும். பிறகு கொஞ்ச நேரம் வயிலினை மீட்டுவார்கள், மிருதங்கத்தை உரசிப் பார்ப்பார்கள்.

முழு ஒப்பனைகளுடன் மேடைக்கு வந்து நிற்கும் பாடகர்களைப் பார்க்கும்போதே பரவசம் பொங்கும். முதல் சில பாடல்கள் பக்திப் பாடல்கள், அவற்றைத் தொடர்ந்து பிரபலமான திரைப்பாடல்கள். ரசிகர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அதற்காக ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ அன்பளிப்பாகத் தந்த ரசிகர்கள் இருந்தார்கள். வாங்கிக்கொண்டு மேடையில் அந்த ரசிகரின் பெயரைச் சொல்லி, அவர் அளித்த தொகையைக் குறிப்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் பாடலைப் பாடத் தொடங்குவார்கள் அந்த இசைக் கலைஞர்கள்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

என ஈரோட்டின் டி.எம்.சவுந்தரராஜனான டேனியல் அற்புதராஜ் பாடும்போது கைதட்டல் விண்ணைப் பிளக்கும்.

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என அற்புதமாகப் பாடுவார் டேனியல்.

(அடுத்த புதன்கிழமை தொடரும்...)

முந்தைய பகுதிகள் :

பகுதி - 1 : நேருவின் மரணமும் குலமகள் ராதையும்!

பகுதி - 2 : மாட்டு வண்டியும் எம்.ஜி.ஆர்., சிவாஜி அரசியலும்!

பகுதி - 3 : தேநீர்க் கடைகளும் டூரிங் டாக்கீஸ்களும்!

பகுதி - 4 : எம்.ஜி.ஆர் கையால் எவர்சில்வர் குடம்?

பகுதி - 5 : கொடுமுடி அரசும், பேத்தாஸ் சண்முகமும்

பகுதி - 6 : ஒரே நாடகத்தில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும்

பகுதி - 7 : இயக்குநர் செய்த துரோகம்!

பகுதி - 8 : கொங்குப் பண்பாட்டில் இசை நாடகங்கள்!

பகுதி - 9 : பொன்னர் - சங்கரும் நடிகர் பிரசாந்தும்

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon