மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

தமிழகத்தில் தரமான கல்வி: நீதிபதி வேதனை!

தமிழகத்தில் தரமான கல்வி: நீதிபதி வேதனை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள் இருந்தும் தரமான கல்வி இல்லை என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி மையங்கள் தொடங்க தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, தொலைதூர கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து, பல்கலைக்கழக சிண்டிகேட் குழு நவம்பர் 28ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது,

இதையடுத்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கல்லூரி கல்வி இயக்குநர் ஆர்.சாருமதி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், சிண்டிகேட் உறுப்பினர்களும், பேராசிரியர்களுமான சிங்காரவேலு, ஜெயக்குமார், சரவணக்குமார், ரவிச்சந்திரன், சின்னதுரை ஆகிய எட்டு பேரையும் ஜனவரி 7ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை கைது செய்து ஜனவரி 9ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான மங்கத்ராம் சர்மா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனக்கு எதிரான கைது வாரண்டை திரும்பப் பெற வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார்

இதை ஏற்று கைது வாரண்டை திரும்பப் பெற்ற நீதிபதி, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொலைதூர கல்வி மையங்கள் தொடங்க பல்கலைக்கழக விதிகள் தடை விதித்த போதும், அதை மீறி செயல்படும் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தலைசிறந்த கவிஞரின் பெயரைத் தாங்கியுள்ள பல்கலைக்கழகத்தில் அவரது பெயருக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, பல்கலைக்கழகத்தின் மாண்பை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon