மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

அயோத்தி வழக்கு: நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு!

அயோத்தி வழக்கு: நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு!

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை முதல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி – பாபர் மசூதி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையின்போது, 2019 ஜனவரி மாதம் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகள் அமர்வு இதனை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 10ஆம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வின் கீழ் விசாரணை தொடங்கப்படும் என்றும், அமர்வில் இடம்பெறும் நீதிபதிகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன்படி, நேற்று (ஜனவரி 8) அயோத்தி வழக்கு விசாரணைக்கான அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகிப்பர். நாளை (ஜனவரி 10) காலை 10.30 மணிக்கு அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அடுத்த இடங்களில் உள்ளனர்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon