மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கோவை: விதிமீறல்களைக் கண்காணிக்க செயலி!

கோவை: விதிமீறல்களைக் கண்காணிக்க செயலி!

கோவையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில் ‘police e eye’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜனவரி 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிப்பதற்காக police e eye என்ற செயலியைக் காவல் ஆணையர் சுமித்சரண் தொடங்கி வைத்தார். கோவையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், தலைகவசம் இல்லாமல் பயணிப்பது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரைப் படம்பிடித்து, பொதுமக்களே இந்தச் செயலி மூலம் காவல் துறைக்குப் புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் செயலில் பதிவாகும். இதையடுத்து, விதிமீறல்களில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் செயலி சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

விதிமுறையை மீறிய 30 அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, அரசு வாகனங்களும் விதிமீறலில் ஈடுபட்டால், அந்தத் துறையின் தலைமை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் ராஜ்கண்ணா தெரிவித்தார்.

அபராதம் செலுத்த மறுப்பவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும். பின்பு, நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon