மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

வாழ்வெனும் சாக்லேட் பெட்டி!

வாழ்வின் பொருள் என்ன என்பது விடை காண இயலாத கேள்வி. ஒவ்வொருவரும் தத்தமது பார்வைக்கு ஏற்ப இதற்குப் பதில் சொல்லலாம். இதுவும் ஒரு வாழ்க்கையா என்ற சலிப்பு இந்தக் கேள்வியின் மறுபக்கம்.

காலையில் கண் விழிக்கும்போதே, விடிந்துவிட்டதே என்ற சோர்வு சிலருக்குத் தோன்றும். இந்த உலகில் எதுவும் நமக்கானதல்ல என்ற எண்ணம் வாட்டி வதைக்கும். அந்த வாதை தரும் வேதனையில் வாழ்க்கையையே சிதைத்துக்கொள்ளும் முடிவைக்கூடச் சிலர் கைக்கொள்ளும் வாய்ப்புண்டு.

இதுபோன்ற அவநம்பிக்கைக் கணங்களை எதிர்கொள்ளும் நேரத்தில், ‘பாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்கலாம்.

எதற்குமே லாயக்கு இல்லை என்று சமூகத்தினால் கைவிடப்பட்ட ஒரு சிறுவன், எண்ணத்தில் அடங்காத சாதனைகளுக்குச் சொந்தக்காரன் ஆகிறான் என்பதே இந்தப் படத்தின் கரு. அந்தச் சாதனைகள் எதுவும் அதிசய நிகழ்வுகள் அல்ல. நாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் வாழ்வின் எல்லைக்கு உட்பட்டவைதான் அவை.

படத்தின் நாயகன் பாரஸ்ட் கம்ப் பேசும் ஒரு வசனம். “வாழ்க்கை என்பது சாக்லேட்கள் நிரம்பிய ஒரு பெட்டி. அதில் எப்போது என்ன கிடைக்கும் என்பது ஒருபோதும் தெரியாது”.

வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன நடக்குமென்று யாருக்குத்தான் தெரியும், அப்புறம் ஏன் கவலை கொள்கிறாய் என்ற கேள்வி இதன் பின்னிருக்கிறது. பாரஸ்ட் கம்ப் திரைப்பட ரசிகர்களால் இந்த வசனத்தை மறக்கவே முடியாது.

பாரஸ்ட் கம்ப் சிறு வயதில் தயக்கங்களைச் சுமக்கும்போது, அவனது தாயார் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடுவார். “ஒருபோதும் உன்னை விடச் சிறந்தவன் நான்தான் என்று சொல்ல யாரையும் அனுமதிக்காதே” என்று கூறுவார். வளரிளம் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய சொற்கள் இவை.

நம்மைப் பற்றி நாம் கொள்ளும் நம்பிக்கையைவிட, பிறர் நம் மீது கொள்ளும் அவநம்பிக்கை பெரியதா என்ன?

- உதய்

செவ்வாய், 8 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon