மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஆர்.எஸ்.எஸ். அழைப்பு: அவசரமாய் சென்னை வந்த அமித் ஷா

ஆர்.எஸ்.எஸ். அழைப்பு:  அவசரமாய் சென்னை வந்த அமித் ஷா

வருகிற ஜனவரி 21 ஆம் தேதி பூத் கமிட்டி உறுப்பினர்களோடு கலந்துரையாடுவதற்காக ஈரோடு வருவதாக இருந்த பாஜக தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழைப்பின் பேரில் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாமல் திடீரென நேற்று ஜனவரி 7 ஆம் தேதி மாலை சென்னை வந்தார்.

வர இருக்கிற 2019 மக்களவை தேர்தல் பற்றிய திட்டமிடலுக்காகவும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றிய ஆலோசனைக்காகவும் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். ரகசிய ஆலோசனை நடத்த இருக்கிறது என்றும், இதில் தேசிய அளவிலான முக்கியமான சங் பரிவார தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றும் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில், பாஜக பிரதமர் வேட்பாளர் யார்? ஆர்.எஸ்.எஸ். ரகசிய ஆலோசனை! என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதியே செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படியே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவுள்ள உத்தண்டியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் கூடியிருக்கிறது.

இதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் முன் கூட்டியே சென்னை வந்துவிட்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜகவின் பொதுச் செயலாளர்கள் ராம் லால், ராம் மாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர கூட்டம் இது என்று அழைக்கப்பட்டாலும், நாம் ஏற்கனவே செய்தியில் குறிப்பிட்டிருந்தது போல், 2019 மக்களவைத் தேர்தல் வியூகம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி, ராமர் கோவில் கட்டுவதில் பிரதமரின் கருத்து உள்ளிட்ட அம்சங்களே பிரதானமாக விவாதிக்கப்பட இருக்கின்றன.

ஏற்கனவே பாஜகவின் இரு பொதுச் செயலாளர்கள் அழைக்கப்பட்ட நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா உத்தண்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை திடீரென சென்னை வந்தார். அவரது இந்த சென்னை பயணம் திடீரென திட்டமிடப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இதனால் பெரிய அளவுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகளையும் பாஜகவினர் நடத்தவில்லை.

பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகிச் செல்லல், சுஷ்மா, உமாபாரதி போன்ற முக்கிய தலைவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என விலகிச் செல்லல், கட்சியின் தேர்தல் தோல்வி பற்றிய நிதின் கட்கரியின் கருத்து, கட்சியில் இரு நபர் ஆதிக்கம் இருப்பதாக பல முக்கிய நிர்வாகிகளின் முறையீடு, அரசு மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி இவற்றையெல்லாம் முன் வைத்து வர இருக்கும் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக மீண்டும் முன்னிறுத்தலாமா வேண்டாமா என்று விவாதித்து முடிவெடுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் முக்கிய அஜெண்டா. இதற்காகத்தான் அமித் ஷா திடீரென அழைக்கப்பட்டிருக்கிறார். இன்று சில மணி நேரங்கள் அமித் ஷாவுடன் முக்கிய விவாதம் நடைபெறும். பிறகு இதுகுறித்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும், அதன் பிறகே முடிவெடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அமித் ஷாவின் சென்னை விசிட்டை அடுத்து, பிரதமர் மோடியின் கவனம் முழுதும் இன்று சென்னையை நோக்கியே இருக்கும் என்கிறார்கள் பாஜக சீனியர்கள்.

செவ்வாய், 8 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon