மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜன 2019

ஹாபியே வேலையானால்…!

ஹாபியே வேலையானால்…!

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? பகுதி 3 - காம்கேர் கே.புவனேஸ்வரி

15, 20 ஆண்டுகளுக்குமுன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரதநாட்டியம் ஆடுவது... இவற்றை ஹாபியாக மட்டுமே செய்துவந்தார்கள்.

படம் வரையத் தெரிந்த சிறுவர்கள் பொங்கல் வாழ்த்துக்கு போஸ்ட் கார்டில் படம் வரைந்து அனுப்புவார்கள். அதையே பணியாக எடுத்துக்கொண்டவர்கள் தேர்தல் நேரத்தில் சுவர்களில் படம் வரைந்து விளம்பரம் எழுதவும், கடைகளுக்கு விளம்பரம் எழுதவும் மட்டுமே தங்கள் ஓவியத் திறமையைப் பயன்படுத்திவந்தார்கள்.

பாட்டுப் பாடுபவர்கள் நவராத்திரி கொலு சமயத்தில் தினமும் பாடுவார்கள். கதை கவிதை கட்டுரை எழுதுபவர்கள் அவற்றைப் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிவிட்டு அவை பிரசுரம் ஆகுமா எனக் காத்துக் கிடப்பார்கள்.

அப்போதெல்லாம் திறமைகளை வெளிப்படுத்த அதிகபட்ச வாய்ப்புகளும் அவ்வளவுதான்.

ஆனால் இன்றோ இதுபோன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு சாஃப்ட்வேர், மல்டிமீடியா துறைகளில் நல்ல வரவேற்பு. கம்ப்யூட்டரில் பாட்டுப் பாடுவது, படம் வரைவது, கதை, கட்டுரை, கவிதை எழுதுவது என வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

முன்பெல்லாம் தங்கள் திறமையை கண்டுகொள்வதும் வளர்த்தெடுப்பதும்தான் முக்கியமானதாக இருந்துவந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறித் தங்கள் திறமையைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்திப் பொருளீட்டுவது என்பது முக்கியமானதாகிவிட்டது.

எத்தனையோ மாணவ மாணவிகள் கம்ப்யூட்டரில் பி.ஈ., எம்.ஸி.ஏ., எம்.எஸ்.ஸி. என்று பட்டங்கள் பெற்றிருந்தும் வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் திறமையை முழுமையாகப் பட்டை தீட்டவில்லை.

இன்றைய நவீன கம்ப்யூட்டர், இன்டர்நெட் யுகத்தில் கம்ப்யூட்டரையும், புத்தகப் படிப்பையும் தவிர எழுதும் திறமை, பாடும் திறமை, படம் வரையும் திறமை என்று பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

இது போன்ற வேலைக்கு இன்று ஆட்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புகள் அதிகம். இன்று மாணவர்கள் கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் மற்றும் அது சார்ந்த படிப்பையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அடிப்படைத் திறமையில் முழுமை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களைக் கற்றுக்கொள்ள ஓரிரு மாதங்கள்தான் ஆகும். ஆனால் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக்கொள்ள வருடங்கள் ஆகும். எனவே நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருங்கள். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சாஃப்ட்வேர்களைக் கற்கும் நேரங்களில் உங்கள் திறமை உங்கள் வாழ்க்கைக்குக் கை கொடுக்கும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், கணக்கைக் கற்றுக் கொடுக்கலாம், ஆங்கிலத்தைச் சொல்லித் தரலாம். ஆனால், திறமையைச் சொல்லித்தர இயலாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்றில் திறமை இருக்கும். அதைக் கண்டுகொண்டு வளர்த்து செம்மைப்படுத்திக்கொள்பவரே வாழ்க்கையில் நன்கு முன்னேறுகிறார்.

எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வெப்சைட், பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என மீடியாக்களுக்கு எழுதுவதே பணியாக அமைந்தால் எப்படி இருக்கும்!

படம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு படம் வரைந்து அனிமேஷன் செய்வதே பணியாக அமைந்தால்?

பாட்டுப் பாடுபவர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பதே வேலையாக அமைந்தால்?

எண்ணிப் பாருங்கள் அந்த வாழ்க்கையை!

உங்கள் திறமை அத்தனைக்கும் தீனிபோட இன்டர்நெட் உலகம் காத்துக் கிடக்கிறது. அந்த உலகில் நீங்கள்தான் படைப்பாளி, நீங்கள்தான் விளம்பரதாரர். நீங்கள்தான் இயக்குநர். நீங்கள்தான் வியாபாரி. நீங்கள்தான் விற்பனையாளர். இப்படி அனைத்திலும் All-in-One ஆக இருப்பதற்கான வாய்ப்பு இன்று அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. பயன்படுத்தி முன்னேறுபவர்கள் புத்திசாலி.

பிளாகிலும் ஃபேஸ்புக்கிலும் தனக்குத் தோன்றியதை எழுதித் தன் நட்பு வட்டத்தில் ஆயிரக்கணக்கில் லைக் பெற்ற எத்தனையோ பேர் இன்று பத்திரிகை நிறுவனங்களில் முன்னணிப் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

டிவிட்டரில் அன்றாட நிகழ்வுகளுக்கு கமென்ட் போட்டவர்களில் பலர் விளம்பர நிறுவனங்களில் ‘கன்டன்ட் ரைட்டர்’ பதவியில் இருக்கிறார்கள்.

யு-டியூபில் தன்னைச் சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோவாக்கிப் பதிவுசெய்தவர்கள் இன்று சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் ஒளிப்பதிவாளர்களாகவும், உதவி இயக்குநர்களாகவும், இயக்குநர்களாகவும் பணிபுரிகிறார்கள். பலர் சினிமாவும், குறும்படமும் தயாரிக்கும் அளவுக்கு அனுபவம் பெறுகிறார்கள். யூடியூப் நட்சத்திரங்களாகவும் சிலர் சக்கைபோடு போடுகிறார்கள்.

இப்படி ஹாபியே வேலையாக மாறினால் எப்படி இருக்கும்? அந்த வாழ்க்கையைப் பெறுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

கற்போம்... கற்பிப்போம்...!

(இந்தத் தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று...)

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐ.டி. நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MDஆகக் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

சனி 5 ஜன 2019