மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜன 2019

கடமையும் விருப்பமும்!

கடமையும் விருப்பமும்!

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

ஒரு மாணவனுக்கு உளவியல் ரீதியாக அறிவுரை வழங்க கோரி ஒரு பள்ளியிலிருந்து என்னிடம் அனுப்பி இருந்தார்கள். கூடவே அவன் அப்பாவும் வந்திருந்தார். அவன் மனதைப் படிக்க அவன் வயதில் நான் எப்படி இருந்தேன் எனச் சொல்லிக்கொண்டே வந்தேன்.

“நான்கூட உன்னைப் போல்தான்… உனக்கு எப்படி உன் அம்மா அப்பா காலையில் எழுந்ததும் படி படி என்று சொன்னால் பிடிக்காதோ... அப்படித்தான் எனக்குக்கூடக் காலையில் எழுந்ததும் கத்திரிக்காய் குழம்பு செய், வெண்டைக்காய் கறி செய், சாதம் சமைத்து வை என்று யாராவது சொன்னால் கோபம் வரும்… சுத்தமா பிடிக்காது…”

இதைச் சொன்னதும் அந்த மாணவன் சிரித்துவிட்டான்.

“அதனால் நான் என்ன செய்வேன் தெரியுமா… சீக்கிரமே எழுந்து எனக்குப் பிடித்த எழுத்து வேலையை 2 மணி நேரம் செய்துவிட்டு வீட்டு வேலை ஏதேனும் இருந்தால் செய்வேன்...”

இப்போதும் அவன் முகத்தில் சிரிப்பு மாறவில்லை. நான் பேசியது அவன் மனதுக்குள் சென்றுவிட்டது என்பது புரிந்தது.

அவன் அப்பாவிடம், “உங்கள் பையனுக்கு மனதுக்குள் ஏதோ ஒன்று திருப்தி இல்லாமல் அவஸ்தைப்படுகிறது. வெளி உலகிலிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கவனஈர்ப்பு என்ற போர்வையில் தேவைப்படுகிறது. அந்த கவன ஈர்ப்பு சரியான பாதையில் இருந்திருந்தால் கஷ்டமோ, நஷ்டமோ இல்லை. அது இல்லாதபோது ஏற்பட்ட உளவியல் சிக்கல்தான் இது. அவனுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய உதவுங்கள். அவன் ஏங்கிக்கொண்டிருக்கும் அங்கீகாரம் கிடைக்கும். படிப்பில் மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தும் அளவுக்கு மனதும் ஷார்ப் ஆகும்” என்று சொல்லி அனுப்பினேன்.

நம் அனைவருக்குமே இந்த உளவியல் தீர்வு பொருந்தும் என நினைக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் கமிட்டட் வேலை என்ற ஒன்றையும், பிடித்த வேலை என்ற ஒன்றையும் வைத்துக்கொண்டால் நம் மனம் பேலன்ஸ் ஆகும். பிடித்த வேலையைச் செய்யும்போது கமிட்டட் வேலையைச் செய்வதற்கான எனர்ஜி நமக்குள் பெருகுவது நிச்சயம்.

இதுவரை இப்படி கமிட்டட் வேலை, பிடித்த வேலை என வைத்துக்கொள்ளாதவர்கள் இனி முயற்சி செய்துதான் பாருங்களேன்.

கமிட்டட் வேலை கடமை சார்ந்ததாக இருக்கும். பிடித்த வேலை பெரும்பாலும் திறமை சார்ந்ததாக இருக்கும்.

நம் ஒவ்வொருவருடைய முக்கிய அடையாளமாக இருப்பதும் நம்முடைய திறமைதான். நமக்குள் இருக்கின்ற திறமையை வெளிக்கொண்டுவருவதே ஒரு திறமைதான்.

படம் வரைதல், கதை கவிதை கட்டுரை எழுதுதல், பாட்டுப் பாடுதல், தோட்டம் அமைத்தல், வளர்ப்புப் பிராணிகளைப் பராமரித்தல் இப்படி ஒவ்வொருக்குள்ளும் ஓர் ஆர்வமும் அது சார்ந்த திறமையும் இருக்கும். அதை என்ன என்று கண்டுபிடித்துவிட்டால், அந்தத் திறமையை மெருகேற்றிக் கொள்வதுதான் அடுத்த வேலை.

முதலில் நோட்டு ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். படம் வரையத் தெரிந்தவர்கள் தினமும் அதில் தேதி போட்டு, படம் வரைந்துகொண்டே வரலாம். எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை அதில் கதையாக எழுதி வரலாம். அதை நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடம் காண்பித்து அவர்கள் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு திறமையை மெருகேற்றிக்கொண்டு வர வேண்டும்.

உங்கள் திறமையைக் கண்டுபிடித்து, தொடர் பயிற்சி செய்து, மெருகேற்றிக்கொண்டே வர வேண்டும். சங்கீதம் கற்பவர்கள் விடியற்காலையில் பாடி சாதகம் செய்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சாதகம் என்றால் பயிற்சி. பாட்டுக்கு மட்டும் அல்ல எல்லாத் திறமைகளுக்கும் சாதகம் அவசியமே.

இப்படிச் செய்து வந்தால் உங்கள் படிப்போடு சேர்ந்து, உங்கள் திறமையும் வளர்ந்து வரும். இரட்டைப் பட்டங்கள் பெறுவதற்கு ஒப்பாகும் இந்தச் செயல்.

கற்போம்... கற்பிப்போம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் சனியன்று...)

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

வியாழன் 3 ஜன 2019