மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: தீபா- செல்வி-அழகிரி: திருவாரூர் பரபரப்பு!

டிஜிட்டல் திண்ணை: தீபா- செல்வி-அழகிரி: திருவாரூர் பரபரப்பு!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

“புது வருடம் பிறந்துவிட்டது. திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவித்ததால் அரசியல் கட்சிகளும் செம பிஸியாகிவிட்டது. விறுவிறு வென வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம். திமுகவுக்கும் சரி... அதிமுகவுக்கும் சரி இந்த தேர்தல் கௌரவ பிரச்னை. அதனால் வேட்பாளர் விஷயத்தில் இரண்டு கட்சிகளின் கவனமும் ரொம்பவும் தீவிரமாக இருக்கிறது.

திமுக தரப்பில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளரான பூண்டி கலைவாணன் தான் வேட்பாளர் என்று திமுக வட்டாரத்தில் தகவல்கள் பரவிவருகின்றன. அதேநேரம் கலைஞரின் மூத்த மகள் செல்வி நிற்கப் போகிறார் என்று ஒரு வதந்தி பரவுகிறது. கலைஞர் திருவாரூரில் நின்றபோது பிரசாரப் பயணத்திலும், ஜெயித்தபிறகும் தொகுதியில் கலைஞரோடு அதிகம் பயணித்தவர் செல்விதான். எனவே கலைஞர் இடத்தில் செல்வியை நிறுத்தினால் என்ன என்று ஒரு கேள்வி திமுக வட்டாரத்தில் பரவியது. ஆனால் இதற்கு செல்விக்கு இஷ்டம் இல்லை என்கிறார்கள் கோபாலபுரம் வட்டாரத்தில்.

தவிர மு.க.அழகிரி திருவாரூரில் சுயேச்சையாகக் களமிறங்கப் போகிறார் என்று இன்னொரு வதந்தி மதுரையை மையமாகக் கொண்டு பரவுகிறது. சில மாதங்களுக்கு முன் அழகிரியின் மகன் துரை தயாநிதி திருவாரூர் தொகுதியில் ஒரு சர்வே எடுத்தார். அதில் அழகிரி திருவாரூரில் நின்றால் ஜெயிக்கமுடியும் என்று தகவல்கள் கிடைத்திருப்பதாக அழகிரியிடம் பேசியிருக்கிறார். ஆனால் அழகிரியோ அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. முன்பெல்லாம் வாரம் ஒருமுறை தனது ஆதரவாளர்களை தன் வீட்டிலும், பண்ணை வீட்டிலும் சந்திக்கும் பழக்கமுள்ள அழகிரி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தன் ஆதரவாளர்களை சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் எப்படி அவர் தேர்தலில் நிற்பார் என்ற கேள்வியும் அழகிரி வட்டாரத்தில் இருந்தே வருகிறது” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

அதற்கு ஒரு ஆச்சரியக் குறியை பதிலாக இட்டுவிட்டு, ஃபேஸ்புக் தனது நிலைத் தகவலை டைப் செய்ய ஆரம்பித்தது.

“திமுகவில் இப்படி என்றால், அதிமுகவில் திருவாரூர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு திருப்பம் நடந்துகொண்டிருப்பதாக தகவல்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தது தெரிந்தது. இப்போது மீண்டும் தீபாவும் மாதவனும் சேர்ந்து விட்டார்கள். சேர்ந்த கையோடு மாதவன் ரகசியமாக ஒரு வேலை பார்த்திருக்கிறார்.

வடசென்னை நண்பர் ஒருவர் மூலமாக அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்திருக்கிறார் மாதவன். ‘தீபாவுக்கும் எனக்கும் சில பிரச்னைகள் இருந்துச்சு. இப்போ எல்லாம் சரியாகிடுச்சு. அவங்க தனியாக ஒரு கட்சி நடத்துறதை விட அதிமுகவில் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்பது என்னோட எண்ணம். இதை இன்னும் தீபாகிட்ட கூட நான் பேசலை. உங்களோடு தீபா வந்தால் அவங்களுக்கு உரிய மரியாதையை நீங்க கொடுத்தால் போதும். அதுக்கு நீங்க உத்தரவாதம் கொடுத்தால் இணைப்புக்கு நான் ஏற்பாடு பண்றேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அமைச்சர் ஜெயகுமாரோ, ‘எங்களுக்கு சசிகலா குடும்பம்தான் வேண்டாம்னு நினைக்கிறோமே தவிர, அம்மா குடும்பத்தை சேர்ந்தவங்களை ஒதுக்கணும்னு நினைச்சதே இல்லை. அம்மா குடும்பத்து ஆட்கள் எங்களோட இருந்தால் எங்களுக்கும் அது பலம்தான். தீபா முன்னாடியே இங்கே வந்திருக்கணும். இதுவே லேட்தான். நீங்க தீபாகிட்ட பேசுங்க. இங்கே நான் பேசிக்கிறேன். அம்மா குடும்பத்து பொண்ணுக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு எங்களுக்கு தெரியும்...’ என உறுதி கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் தீபாவிடம் பேசியிருக்கிறார் மாதவன். அப்போது தீபா, ‘நான் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து சிலர் மட்டும் என்னோடு இன்னும் இருக்காங்க. அவங்களையும் கூப்பிட்டு பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்...’ என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படி நிர்வாகிகளையும் கூப்பிட்டு பேசியிருக்கிறார் தீபா. அதிமுகவுடன் இணைவதை பற்றி தீபா சொன்ன போது, ‘ஆமாம்மா... அதுதான் சரியான முடிவு. நாம தனியாக நின்னும் நிச்சயமாக செலவும் பண்ண முடியாது. நாங்களே இதை உங்ககிட்ட சொல்லியிருப்போம். உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுனுதான் அமைதியா இருந்தோம்...’ என்று தீபா பேரவை நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். தீபா கிரீன் சிக்னல் காட்டியதும், மீண்டும் ஜெயகுமாருடன் பேசியிருக்கிறார் மாதவன்.

‘கட்சியோட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருடன் இது தொடர்பாக நான் பேசிட்டு இணைப்பு விழாவை எப்போ வெச்சுக்கலாம்னு சொல்றேன்...’ என்று சொன்னாராம் ஜெயகுமார்.

எடப்பாடியிடம் இந்த தகவலை ஜெயகுமார் சொன்னபோது, ‘தீபாவுக்கு இன்னும் கூட்டம் வருதா?’ என்று கேட்டாராம் எடப்பாடி. அதற்கு ஜெயகுமாரோ, ‘தீபாவுக்கு கூட்டம் வருதோ இல்லையோ... தீபா அம்மா குடும்பத்து பொண்ணு. அவங்க நம்ம கூட இருப்பது ஒருவகையில் நமக்கு பலம்தான். வருபவர்களை சேர்த்துக்குவோம். அந்தப் பொண்ணுக்கு வந்ததும் எதையும் தூக்கி கொடுத்துடப் போறது இல்லை. அவங்களுக்கான மரியாதையை மட்டும்தான் எதிர்பார்க்கிறாங்க. அதை கொடுக்கிறதுல என்ன குறைஞ்சிடப் போறோம்...’ என சொல்ல.. எடப்பாடியும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் தீபா பேரவை மற்றும் மாதவனின் எம்.ஜி.ஆர். அண்ணா திமுகவும் அதிமுகவுடன் இணையும்.

தீபா அதிமுகவுக்கு வருகிறார் என்பது உறுதியானதும், திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏன் தீபாவையே களமிறக்கக் கூடாது என்ற பேச்சும் வந்திருக்கிறது. முதல்வரிடம் இது சம்பந்தமாக பேசியவர்கள், ‘திருவாரூர் தொகுதியில் நம்ம கட்சியில் பாப்புலரான யாரும் இல்லை. திமுகவில் யாரை நிறுத்தினாலும் அவரை எதிர்த்து போட்டியிட மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் இருந்தால் நல்லதுதானே...தீபாவுக்கு மக்களிடம் அறிமுகம் தேவை இல்லை. அதனால் திருவாரூருக்கு தீபாவை யோசிக்கலாம்..’ என ஐடியா கொடுத்திருக்கிறார்கள். திருவாரூருக்கு தீபா பெயரும் ஆலோசனையில் இருக்கிறது. அதிமுகவில் எதுவும் நடக்கலாம்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு, சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 1 ஜன 2019

அடுத்ததுchevronRight icon