மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

முதல் ஜல்லிக்கட்டு!

முதல் ஜல்லிக்கட்டு!வெற்றிநடை போடும் தமிழகம்

2019 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் போட்டியை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கினர். இதையடுத்து மூன்றாவது ஆண்டாக 2019ல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும்.

அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு, முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று (ஜனவரி 1) தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 27 ஆம் தேதி, தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசாணையை வெளியிட்டது. அதில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதன், 2 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon