மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

எச்ஐவி ரத்தம்: அறிக்கை கேட்கும் மகளிர் ஆணையம்!

எச்ஐவி ரத்தம்: அறிக்கை கேட்கும் மகளிர் ஆணையம்!

சாத்தூர் மற்றும் சென்னை கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி ரத்தம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பமாக உள்ள பெண் ஒருவருக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒன்பது பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோன்று எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது குறித்து ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ரத்த வங்கி ஊழியர் அந்த ரத்தத்தை மருத்துவமனைக்கு அனுப்பும் முன்பு பரிசோதனை செய்யவில்லை என்றும், அந்த ரத்தம் பாதுகாப்பானது எனக் குறிப்பு ஒட்டப்பட்டு இருந்ததால் பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணிக்குச் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகச் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புகாரை மருத்துவமனை டீன் வசந்தா மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இரு பெண்களுக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த இரண்டு சம்பவங்களும் மிகவும் வருத்தத்துக்குரியது. இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி, விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

புதன், 2 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon