மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

தமிழ் சினிமா 365: 12,000 கோடியின் வெள்ளைக் கதை!

தமிழ் சினிமா 365: 12,000 கோடியின் வெள்ளைக் கதை!வெற்றிநடை போடும் தமிழகம்

-இராமானுஜம்

தமிழ் சினிமா வழக்கமான நாளாகவே டிசம்பர் 31 2018ஐ கடந்திருக்கிறது. கடந்து போன 365 நாட்களில் வருடத்தின் தொடக்க நாளான 2018ஜனவரி முதல் நாள் வெளியான அனைத்து தினசரி பத்திரிகைகளிலும் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த செய்தி தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. அதன் விளைவு கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தமிழ் ஆங்கில தினசரி, காட்சி ஊடகங்கள், இணையதளங்களின் செய்தி பசிக்கு, பிரேக்கிங் நியுஸுக்கு கச்சாப் பொருளாக ரஜினிகாந்த் பயன்பட்டார் அல்லது பயன்படுத்தப்பட்டார். அதேபோல தமிழ் சினிமாவில் நடைபெற்ற சிறு சம்பவங்கள் கூட தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு தங்களுக்கான கச்சாப் பொருளாக மாற்றிக் கொள்ளும் மலிவான ஜர்னலிசம் இந்த வருடம் ஆதிக்கம் செலுத்தியது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத, அவர்களுக்குத் தேவையில்லாத சினிமா உள்விஷயங்களை விவாத மேடையாக்கும் விபரீத நிகழ்வுகள் தமிழ் தொலைக்காட்சிகளில் அடிக்கடி அரங்கேற்றப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிப்பிலும், 184 நேரடி தமிழ் படங்கள் 2018இல் ரிலீஸ் செய்யப்பட்டிருகிறது . இவற்றில் தயாரிப்பாளர்களால் செய்யப்பட்ட முதலீடு சுமார் 1500 கோடி ரூபாய். 184 தமிழ் சினிமா படங்களை நம்பி தமிழகத்தில் இயங்கி வரும் திரைகள் மொத்தம் 1100. இவற்றில் செய்யப்பட்டிருக்கும் திரும்பப் பெற முடியாத முதலீடு சுமார் 500 கோடி. திரையரங்கில் செய்யப்பட்டிருக்கும் உள், வெளி அலங்காரம் மற்றும் 1100 திரைகள் அமைந்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி.

தமிழகத்தில் மட்டும் சினிமா படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன், ஸ்டுடியோக்கள் எனப் பல பிரிவுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு மற்றும் சொத்து மதிப்பு சுமார் 8500 கோடி. ஆகமொத்தத்தில் சுமார் 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பவர்களுக்கான வருமானம் 1500 கோடி. தனியார் தமிழ் தொலைக்காட்சிகள் இயங்குவதற்கான பிரதான கச்சாப் பொருள் சினிமா. தமிழின் முன்னணி வாரம் இருமுறை வரும் இதழ்கள், வார இதழ்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் செயல்படும் ரசிகர் மன்ற பத்திரிகை போன்றவை வெளியாக சினிமா படங்கள் தேவைப்படுகிறது. வருடத்திற்கு 1500 கோடியை மூலதனமாகப் போட்டு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தயாரிப்பாளர்களைத் தவிர அனைவருக்கும் லாபகரமானதாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் 80% தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து சினிமா தயாரிப்புத் தொழிலை துறந்து வெளியேறுகின்றனர். ஆனால், அவர்கள் தயாரிக்கும் படங்களை வைத்து தொழில் நடத்துபவர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகின்ற ஒரே தொழில் சினிமாவாக மட்டுமே இருக்கிறது. தமிழக முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா மூவரும் திரைப்படத் துறையில் இருந்து சென்றவர்களானாலும் பின் ஏன் இந்த நிலைமை? 2018ம் வருடம் தமிழ் சினிமாவுக்கு கற்று தந்தது என்ன? விட்டுப் போனது என்ன? நிகழ்காலத்தில் நடப்பது என்ன? உள்ளது உள்ளபடி பதிவு செய்யும் பகுதி தமிழ் சினிமா- 365 விடுமுறையின்றி தினமும் பகல் 1 மணி பதிப்பில் சுவாரஸ்யமான தகவல்களுடன் 02.01.2019 முதல் உங்கள் மின்னம்பலத்தில்...

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon