மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 நவ 2019

திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன்?

திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன்?

20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தாமல், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது ஏன் என்று கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு, வரும் 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துவிட்டன. 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுதொடர்பாக இன்று (ஜனவரி 1) அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதில் மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் தான் என்ன” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“மழை பெய்யும் ஆகவே தள்ளி வையுங்கள் என்று தமிழக அரசு முன்பே தனது தலைமைச் செயலாளரை விட்டு தேர்தல் ஆணையத்துக்கு எழுதியது போல, இப்போது மழை-புயல் முடிந்து விட்டது உடனே வையுங்கள் என்று கடிதம் ஏதாவது போனதா” என்று சந்தேகம் தெரிவித்துள்ள வீரமணி, “திமுகவைப் பொறுத்தவரை அது என்றும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மையே. 20 தொகுதிகளுக்கு தேர்தல் வைக்காமல் இதற்கென்ன தனி அவசரம்? அவற்றையும் சேர்த்து குட்டிப் பொது சட்டப்பேரவை தேர்தல் போன்று நடத்தினால், ஜனநாயகம் மேலும் காப்பாற்றப்படுவதுடன் இடைத்தேர்தல்கள் மட்டுமல்லாமல் தமிழக ஆட்சியாளருக்கு எடைத் தேர்தல்களாகவும் கூட உணர்த்தும் தேர்தல்களாக இருக்குமே” என்று வலியுறுத்தியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இருபது தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் துணை அமைப்பாக மாறிவிட்டதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதற்கு மாறாக 18 தொகுதிகள் 2017 செப்டம்பர் மாதம் அந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து காலியாக இருக்கின்றன. அவற்றுக்குத் தேர்தல் நடத்துவதற்குத் தடை எதுவும் இல்லை. அதுபோலவே திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கும் தடை எதுவுமில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன் திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதில் உள்நோக்கம் இருக்கிறதோ என்று ஐயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகளின் தலையீடு இல்லாமல் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தேர்தல் ஆணையம் எப்படி கண்டும் காணாமல் இருந்ததோ அப்படி இங்கும் முறைகேடுகளை அனுமதிக்கப்போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.திருவாரூர் இடைத் தேர்தலோடு ஏனைய 19 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அறிவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

புதன், 2 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon