மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கஜா நிவாரணம் போதாது : தலைவர்கள் கண்டனம்!

கஜா நிவாரணம் போதாது : தலைவர்கள் கண்டனம்!

கஜா நிவாரணப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.1,146 கோடியை ஒதுக்கீடு செய்தது போதாது என்று கூறி மத்திய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மீட்டெடுக்க நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.353.7 கோடியும் அடுத்ததாக நேற்று (டிசம்பர் 31) ரூ.1,146.12 கோடியும் அறிவித்தது.

கடலில் கரைந்த பெருங்காயத்துக்குச் சமம்

மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் கடலில் கரைத்த பெருங்காயத்துக்குச் சமம் என்று கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று (ஜனவரி 1) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளான போது, தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிய நிதி ரூ.25912 கோடியே 43 லட்சம் ஆனால் மத்திய அரசு வழங்கியதோ வெறும் ரூ.1759 கோடியே 55 லட்சம் மட்டுமே.

2016ஆம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்திட, தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியது ரூ.22573 கோடியே 26 லட்சமாகும். ஆனால் மத்திய அரசு வழங்கியது வெறும் ரூ 1793 கோடியே 63 லட்சம் மட்டுமே.

2017ஆம் ஆண்டு ஒக்கி புயல் பாதிப்பு ஏற்பட்ட போது தமிழக அரசு கோரியது ரூ 9302 கோடியாகும். ஆனால் மத்திய அரசு வழங்கியது வெறும் ரூ 413 கோடியே 55 லட்சம் மட்டுமே. இவ்வாறு தமிழகம் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவது, வஞ்சிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்படவில்லை. மாறாக மத்திய அரசின் தயவில் தங்களின் ஆட்சி நீடித்தால் போதும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இருந்து தங்களை மாற்றிக் கொண்டு, கூடவுள்ள சட்டப்பேரவையில், மத்திய அரசின் புறக்கணிப்பு குறித்து விவாதித்து, தமிழகத்தின் கடும் கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்திட தமிழக அரசு முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

யானைப்பசிக்கு சோளப்பொரி

மத்திய அரசின் இந்த ஒதுக்கீடு யானைப்பசிக்கு சோளப்பொரி போடுவதைப் போல் இருப்பதாகக் கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் ஒட்டுமொத்தமாக ரூ.25,000 கோடி அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மிகவும் குறைவாக ரூ.15,000 கோடியை மத்திய அரசிடம் கோரியது. ஆனால், மத்திய அரசு ரூ.1,146 கோடி வழங்கியுள்ளது போதுமானதல்ல. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 7.64 விழுக்காடு மட்டும்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon