மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

புத்தாண்டு தள்ளாட்டம்: 263 ஓட்டுநர் உரிமம் ரத்து!

புத்தாண்டு தள்ளாட்டம்: 263 ஓட்டுநர் உரிமம் ரத்து!

நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது சென்னைப் போக்குவரத்து காவல் துறை.

புத்தாண்டு தினத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை காவல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் மூலமாக மக்கள் மது போதையில் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. “குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்படும். இதனால் பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று சென்னை காவல் துறை அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்காக நேற்று (டிசம்பர் 31) இரவு மெரினா, சாந்தோம் , எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கக் காவல் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர், பந்தயங்களில் ஈடுபடுவோரைத் தடுக்கும் வகையில் சென்னையில் 1,022 இடங்களில் தடுப்புகள், 162 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சென்னையில் 263 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கூறியபடி, இவர்களது ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குப் பரிந்துரை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல் துறை.

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்ததாக 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதன், 2 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon