மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

இரட்டிப்பாகும் டீசல் தேவை!

இரட்டிப்பாகும் டீசல் தேவை!

இந்தியாவின் டீசல் தேவை இன்னும் 12 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், “2029-20ஆம் நிதியாண்டில் இந்தியாவின் டீசல் தேவை இருமடங்காக உயருமென்று சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் வேர்ல்டு எனர்ஜி அவுட்லுக் ஆய்வறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்த எண்ணெய் தேவையும் 61 விழுக்காடு அதிகரித்து 350 மில்லியன் டன்னாக உயரும். 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் எண்ணெய் தேவை 217 மில்லியன் டன்னாக இருந்தது.

தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. 2016-17 முதல் 2029-30 வரையிலான ஆண்டுகளுக்கு இந்தியாவின் எண்ணெய் தேவைக்கான ஆண்டு வளர்ச்சி விகிதம் 3.47 விழுக்காடாக உள்ளது. ஆனால் சீனாவின் வளர்ச்சி விகிதமோ 1.92 விழுக்காடாக உள்ளது. இதே காலகட்டத்தில் ரஷ்யாவின் எண்ணெய் தேவை விகிதம் 149 மில்லியன் டன்னிலிருந்து 154 மில்லியன் டன்னாக மட்டும்தான் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், ”இந்தியாவில் 2017-18ஆம் நிதியாண்டில் பெட்ரோல் தேவை 26.2 மில்லியன் டன்னாக உள்ளது. இது 2029-30ஆம் நிதியாண்டில் 49 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். டீசல் தேவை 2017-18 நிதியாண்டில் 81.1 மில்லியன் டன்னாக உள்ள நிலையில் 2029-30ஆம் நிதியாண்டில் 163 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் எண்ணெய் நுகர்வு 2015ஆம் ஆண்டில் 197.8 மில்லியன் டன்னாகவும், 2016ஆம் ஆண்டில் 217.1 மில்லியன் டன்னாகவும், 2017ஆம் ஆண்டில் 222.1 டன்னாகவும் இருந்தது” என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon