மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ஆந்திராவுக்குத் தனி நீதிமன்றம்: தலைமை நீதிபதி பொறுப்பேற்பு!

ஆந்திராவுக்குத் தனி நீதிமன்றம்: தலைமை நீதிபதி பொறுப்பேற்பு!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர் நீதிமன்றங்கள் இன்று (ஜனவரி 1) தொடங்கப்பட்டு செயல்படத் தொடங்கின. தலைமை நீதிபதிகளும் பதவி ஏற்று கொண்டனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து 2014ஆம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஹைதராபாத் தெலங்கானாவுக்கு சொந்தமானது. இதையடுத்து ஆந்திரா தலைநகரமாக அமராவதி உருவாகி வருகிறது. அங்கு சர்தார் வல்லபபாய் படேல் சிலையை விட உயரமாகச் சட்டமன்றம் கட்டப்பட்டு வருகிறது.

எனினும், மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாகியும் இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக உயர் நீதிமன்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. எனவே தனித்தனி நீதிமன்றம் கேட்டு அந்தந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இரு மாநிலங்களுக்கும் தனித்தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அமராவதியில் உயர் நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடையாததால், விஜயவாடா நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக உயர் நீதிமன்றம் இயங்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்தது.

அதன்படி, இன்று புதிய நீதிமன்றம் தொடங்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாகச் சாகரி பிரவின் குமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதுபோன்று தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக டி.பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றுக் கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர், பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள நீதிமன்றம் இந்தியாவின் 25ஆவது உயர் நீதிமன்றம் ஆகும்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon