மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

இங்கே ஒரு ஆணி அடிங்க சார்…

இங்கே ஒரு ஆணி அடிங்க சார்…

புதிய நிதிக் கதைகள் 09 – முருகேஷ் பாபு

சுந்தரமூர்த்திக்கு இது ஏழாவது வீடு… பொருட்களோடு உள்ளே நுழையும்போதே வீட்டு ஓனரும் கூடவே வந்தார்.

“நீங்க என் கண்டிஷன்களை எல்லாம் ஏத்துகிட்டுதான் வந்திருக்கீங்க… எல்லாம் நினைவில் இருக்குதில்ல…” என்றார். சுந்தரமூர்த்தியும் தலையை ஆட்டினார்.

சுந்தரமூர்த்தியின் மனைவி வள்ளி பெட்டிகளைப் பிரிக்காமல் சுந்தரமூர்த்தியிடம் கேட்டாள்.

“உங்களை நம்பி இதையெல்லாம் பிரிக்கலாமா… ஆறு மாசத்துல அடுத்து பொட்டியைக் கட்டுனு சொல்ல மாட்டீங்கள்ல… நானே ஒரு பேக்கர் அண்ட் மூவர்ஸ் நடத்தலாம்ங்கற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆகிடுச்சு…” என்று அவள் சொல்வதில் ஐம்பது சதவிகிதம் கேலியும் ஐம்பது சதவிகிதம் ஆதங்கமும் இருந்தது.

“ம்… தேவையானத மட்டும் வெளிய எடுத்து பயன்படுத்து… மத்தது பேக்கிங்கோட இருக்கட்டும்…” என்றார் சுந்தரமூர்த்தி. அவர் வார்த்தையில் நூறு சதவிகிதத்துக்கும் மேல் கோபம் இருந்தது.

எல்லா வீடுகளிலுமே ஆறு மாதத்துக்கு மேல் சுந்தரமூர்த்தி குடும்பத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கல்யாணம் ஆகி வந்த முதல் வீட்டில் உறவுகளால் பிரச்சினை வந்தது. சுந்தரமூர்த்தியின் அப்பா அம்மா, வள்ளியின் அப்பா அம்மா, மாமா, அத்தை என்று உறவுப்பட்டாளம் வந்து இறங்கிய இரண்டாம் நாள் வீட்டு ஓனர் நேரில் வந்து பெல் அடித்துவிட்டார்.

“என்ன சுந்தரமூர்த்தி சார்… ரெண்டு பேர்னு சொல்லித்தானே வீடு கேட்டீங்க… இப்ப பெரிய கும்பலே வந்து டேரா போட்டிருக்கு…” என்று எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறினார். புதுப் பெண், பெண் வீட்டு உறவுகள் மத்தியில் பெரிய அசிங்கமாகிவிட்டது. ஒரே வாரத்தில் அடுத்த வீட்டைப் பார்த்துவிட்டார் சுந்தரமூர்த்தி.

அடுத்தடுத்த வீடுகளில் ஆணியடிக்காதே… நல்ல தண்ணீருக்கு அதிகாலை எழுந்து ஓட வேண்டும்… மின்சாரக் கட்டணம் மூன்று மடங்காகக் கொடுக்க வேண்டும் என்று பல கண்டிஷன்கள் போடுவதும் சுந்தரமூர்த்தி சண்டை போட்டுக்கொண்டு காலி செய்வதும் அவர்களுக்கு சகஜமாகிவிட்டது.

மகன் பிறந்த ஓராண்டு மட்டும்தான் கருவுற்றது முதல் டெலிவரி வரையில் ஒரே வீட்டில் இருந்தார். அதுவும் கர்ப்பிணி வீட்டைக் காலி பண்ணக் கூடாது என்று செண்டிமெண்டாக வீட்டார் பேசியதால்! அந்த ஓராண்டுக்குள் ஓராயிரம் சண்டைகள்!

“நீ ஒரு ஹவுஸ் ஓனரா இருந்து வாடகைக்கு விட்டுப் பாரு… அப்ப தெரியும் என் கஷ்டம்…” என்றார் ஒரு ஓனர். அப்போதுதான் சுந்தரமூர்த்தி முடிவு செய்தார். அடுத்த ஆண்டு வீட்டை மாற்றியே தீருவது என்று, அதுவும் சொந்த வீட்டுக்கு என்று..!

அந்த முடிவை அவர் எடுக்க முந்தைய நாள் சம்பவம்தான் காரணம்.

அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது வழியில் ஒரு கட்டுமான வேலை நடக்கும் இடத்தைப் பார்த்தார். சிறிய பில்டர்… முதல் கட்டிடம் இதுதான் என்றார் அங்கிருந்த என்ஜினியர். என்ன விலை என்று கேட்க, அவர் சொன்ன விலைக்கும் சுந்தர மூர்த்தியின் சேமிப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அளவில் இருந்தது.

அப்போதுதான் அந்த என்ஜினியர், “சார்… எங்க கன்ஸ்ட்ரக்ஷனுக்கு ஒரு பேங்க் ஃபைனான்ஸ் பண்றாங்க… அவங்ககிட்டே கேட்டுப் பாருங்களேன்…” என்றார்.

ஒரே வாரத்தில் மளமளவென்று காட்சிகள் மாறின. ஏற்கனவே அந்த சைட் பற்றி தெரிந்திருந்ததால் லோன் எளிதாக ஓகே ஆகிவிட்டது. சுந்தரமூர்த்தியின் சம்பளத்துக்கு ஏற்ப அலாட் ஆகும் கடன் வீட்டுக்கு போதுமானதாக இருந்தது. புக் செய்துவிட்டார்.

அடுத்த ஆண்டு வீடு டெலிவரி கிடைத்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். அந்த ஓராண்டுக்குதான் இந்த வாடகை வீடு!

சொன்னபடியே வீட்டைக் கொடுக்கவும் செய்துவிட்டார்கள். கிரகப்பிரவேசத்துக்கு நாள் குறித்து முதல் பத்திரிகையை குடியிருந்த வீட்டு ஓனருக்குதான் கொடுத்தார்.

“இப்படி ஒரு குடித்தனகாரரை மிஸ் பண்ணுறேன்னு வருத்தமா இருக்கு… சும்மா பேருக்குதான் கண்டிஷன் போட்டேன்… எதையும் மீறலை… ஒரு ஆணிகூட அடிக்கலை… நிச்சயமா வர்றேன்…” என்றார்.

விழா நாளன்று வந்த ஹவுஸ் ஓனரை வரவேற்று அழைத்துச் சென்று ஒரு சுவர் அருகே நிறுத்தி கையில் ஒரு சுத்தியலைக் கொடுத்தார் சுந்தரமூர்த்தி.

“இங்கே ஒரு ஆணி அடிங்க சார்…” என்றார் பெருமிதமாக!

சுந்தரமூர்த்தி குடியிருந்த பழைய வீட்டு ஓனர்கள் ஒவ்வொருவராக உள்ளே வரத் தொடங்கினார்கள்.

வீட்டுக் கடன்… சில குறிப்புகள்

1. சொந்த வீடென்பது வசதி மட்டுமல்ல… அந்தஸ்தும் கூட… ஒரு மனிதரின் வாழ்நாள் சாதனையாக சொந்த வீடு இருக்கிறது. ஆனால் அதற்கான பணத்தைச் சேர்ப்பது என்பது நமக்கான பெரிய சவாலாக அமைந்துவிடுகிறது.

2. வாடகை வீட்டில் இருக்கும் அசௌகரியங்கள்தான் நம்மை சொந்த வீடு நோக்கி தள்ளுகின்றன. கையில் காசை வைத்துக் கொண்டு வீடு வாங்குவது என்பது சாத்தியமில்லை. அதனால் வீட்டுக்கடன் நல்ல வழியாக இருக்கும்.

3. வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் வங்கி சார்ந்த நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது நல்லது. அதற்கான பிராசஸ் சற்று பெரிதாகவும் நேரம் பிடிப்பதாக இருந்தாலும் அதுதான் பாதுகாப்பானது. தனிப்பட்ட நிறுவனங்களில் கடன் வாங்குவதில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம்.

4. வீட்டுக் கடனுக்காக நாம் விண்ணப்பிக்கும்போதே அந்த சொத்தின் மீது இருக்கும் வில்லங்கத்தை வங்கியின் லீகல் பிரிவு தெளிவாக அலசி ஆராய்ந்துவிடும். அதனால் நாம் ஏமாற்றப்படும் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

5. வீட்டுக் கடனில் இருக்கும் இன்னொரு வசதி, அதன் குறைவான வட்டி விகிதம். பர்சனல் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்கான வட்டியை விட இதற்கான வட்டி குறைவு. அதனால் நாம் எளிதாக திரும்பச் செலுத்த முடியும்.

6. வீட்டுக் கடன் வாங்கும்போது வீட்டின் மதிப்பில் பதினைந்து சதவிகிதத்தை நாம் செலுத்த வேண்டும். மீதமுள்ள எண்பத்தைந்து சதவிகிதத்தை வங்கி கடனாகக் கொடுக்கும். உங்கள் சம்பளத்தில் ஐம்பது சதவிகிதம் அளவுக்கு மாதத் தவணை செலுத்தும் அளவுக்கு கடன் கிடைக்கும்.

7. மாதத் தவணை என்பது நாம் மாதாமாதம் செலுத்தும் வாடகை அளவுக்கோ அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமாகவோ இருக்கும். அதனால், வாடகை செலுத்துவது போல நாம் கட்டிவிடலாம். ஆனால், வீடு நமக்குச் சொந்தமாக இருக்கும்.

8. வீட்டுக்கடனில் இருக்கும் இன்னொரு வசதி நம்முடைய வரி சேமிப்புக்குப் பயன்படுவதுதான். வீட்டுக்கடனுக்காக நாம் செலுத்தும் வட்டித் தொகையை அப்படியே கழித்துக் கொள்ளலாம். அசலாகச் செலுத்தும் தொகையை 80 சி என்ற பிரிவின் கீழ் காட்டி அதன் உச்ச வரம்புக்கு ஏற்பக் கழித்துக்கொள்ளலாம்.

9. மிக உறுதியாகச் சொல்வதாக இருந்தால் இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பு ஏறிக்கொண்டே செல்லும் நிலையில் நாம் முதலீடாகச் செய்யும் வீட்டின் மதிப்பு மற்ற முதலீடுகளை விட அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது.

10. ஆக, நமக்கான வாழ்விடமாகவும், அதே சமயத்தில் ஏற்றம் தரும் முதலீடாகவும் இருக்கும் இந்த வீட்டை வாங்குவதற்கு வங்கிக் கடனை நாடுவது சரியான முடிவு என்றே சொல்லலாம்.

தங்கமே தங்கம்!

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon