மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 14 நவ 2019

தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்: குவியும் பாராட்டு!

தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்: குவியும் பாராட்டு!

காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய பெண் காவலர் பிரியங்காவுக்குத் தெலங்கானா காவல் துறை சார்ந்த பல உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று ஹைதராபாதிலுள்ள ஒஸ்மானியா மருத்துவமனை அருகே முகம்மது இர்பான் என்ற நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த பெண் ஒருவர், தனது இரண்டு மாதப் பெண் குழந்தையைச் சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம் கொடுத்தார். ஆனால், வெகு நேரமாகியும் அந்த பெண் வராததால் பதற்றமடைந்தார் இர்பான். அந்த குழந்தையைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். பாக்கெட் பால் கொடுத்து அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றனர் அவரது குடும்பத்தினர். இரண்டு மாதக் குழந்தை அதனைக் குடிக்கவில்லை. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அப்துல்கஞ்ச் காவல் நிலையத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தார் இர்பான்.

அங்கு இரவுப் பணியில் இருந்த தலைமைக் காவலர் ரவீந்திரனுக்கு, அழும் குழந்தையை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. இவர், பேகம்பேட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் தன் மனைவி பிரியங்காவைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அக்குழந்தையின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகக் கூறினார். மகப்பேறு விடுமுறையில் வீட்டில் இருந்த பிரியங்கா, உடனடியாக

அப்துல்கஞ்ச் காவல் நிலையம் சென்றார். அந்த குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டினார். அவரது செயலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சானி குமார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பிரியங்காவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தற்போது அந்த குழந்தையை விட்டுச் சென்ற பெண் யாரென்பது தெரிய வந்துள்ளது.

ஒஸ்மானியா மருத்துவமனை வட்டாரப் பகுதியில் குப்பை சேகரிக்கும் தொழிலைச் செய்துவரும் ஷபானா பேகம் என்பவரே அக்குழந்தையை விட்டுச் சென்றார் என்று கண்டறிந்துள்ளனர் போலீசார். அவரிடம் அக்குழந்தையை ஒப்படைத்துள்ளனர். எந்த இடத்தில் இர்பானிடம் குழந்தையை ஒப்படைத்தேன் என்று தெரியாமல் தான் தடுமாறிவிட்டதாகக் காரணம் தெரிவித்துள்ளார் ஷபானா.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon