மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

காங்கிரஸுக்கு மாயாவதி நிபந்தனை!

காங்கிரஸுக்கு மாயாவதி நிபந்தனை!

“பாரத் பந்தின்போது தலித்துகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவில்லையெனில் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்போம்” என்று மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற பட்சத்தில், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் இருவர், சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஒருவர், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4பேர் ஆதரவு தெரிவித்ததையடுத்து முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். இதுபோலவே ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அங்கும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “பாரத் பந்த் நடந்தபோது போராட்டத்தில் கலந்துகொண்ட அப்பாவிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் திரும்பப் பெற வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், இரு மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு நாங்கள் வெளியிலிருந்து தந்துகொண்டிருக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் பாஜகவைப் போல காங்கிரஸும் இருந்துவிடக் கூடாது என்று எச்சரித்த மாயாவதி, “ வெறுமனே அறிவிப்புகள் மட்டும் போதாது என்பதால் காங்கிரஸை எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. வாக்குறுதி அளிக்கும் விஷயத்தில் காங்கிரஸும் பாஜகவும் ஒற்றை நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். இதனை மாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதியன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தலித் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் ’பாரத் பந்த்’ நடத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon