மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

2019 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: அட்டவணை வெளியீடு!

2019 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: அட்டவணை வெளியீடு!

வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தேர்வர்கள் சரியான முறையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கான அட்டவணையை நேற்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். உதவிப் பொது வழக்கறிஞர் கிரேடு-IIக்கான தேர்வு மற்றும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையிலுள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு ஆகியன இந்த ஆண்டில் முதலாவதாக நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 5ஆம் தேதி இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.

www.tnpsc.gov.in எனும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வஇணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில்அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகள் குறித்த அறிவிப்பில் பெரிதாக மாற்றம் இராது என்று இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, 2019 டிசம்பர் மாதம் வரை 29 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

உதவி அரசு வழக்கறிஞர், தடய அறிவியல் துறையின் தொழில்நுட்ப ஆய்வாளர், உதவிசிறைக் கண்காணிப்பாளர், புள்ளியியல் பேராசிரியர்கள், தொல்லியல் துறை நூலகர், மாவட்டக் கல்வி அலுவலர், உப்பு ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத் துறை உதவிக்கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான 52 தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளன.

தேர்வு நடத்தப்படும் முறை, பாடத்திட்ட விபரங்கள், விண்ணப்ப விவரங்கள், தேர்வு நாள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அட்டவணையில் குறிப்பிட்டது போல் அல்லாமல், தேர்வு அறிவிப்பு வெளியாகும் மாதம் மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்குத் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon