மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

மகன் கொலைக்குப் பழிக்குப் பழி: தாய் கைது!

மகன் கொலைக்குப் பழிக்குப் பழி: தாய் கைது!

சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (10). திருவண்ணாமலையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ஒருகட்டத்தில் எல்லை கடந்தது. இது கார்த்திகேயன், மஞ்சுளா இடையே பிரிவை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் உடனான தொடர்பைத் துண்டித்தார் மஞ்சுளா.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று ரித்தேஷ் சாய் தாம்பரம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ், சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலுள்ள செல்போன் கடையொன்றில் பணியாற்றத் தொடங்கினார்.

கடந்த 29ஆம் தேதியன்று, நாகராஜ் வேலைபார்க்கும் கடைக்குள் புகுந்த 3 பேர், அவரை வெளியே இழுத்து வந்து சராமரியாகத் தாக்கினர். வெளியே காத்திருந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் பலியானார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் மகன் ரித்தேஷ் சாய் கொலைக்குப் பழி வாங்கும்விதமாக, மஞ்சுளாவுக்கு இக்கொலையில் தொடர்பிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 31) சென்னை ஜார்ஜ் டவுன் 7ஆவது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பஷீர் முன்னிலையில் மஞ்சுளா மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த தினேஷ் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர், சந்தோஷ் குமார், சரவணன் ஆகியோர் சரணடைந்தனர். வரும் ஜனவரி 4ஆம் தேதி வரை இவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும், 4ஆம் தேதியன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மஞ்சுளா, கடந்த ஜூலை மாதம் தனது மகன் கொலைக்குப் பழி வாங்கும் விதமாக ஒரு கும்பலிடம் துப்பாக்கி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர்கள் பொம்மை துப்பாக்கியைக் கொடுத்து ஏமாற்றியதாக, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருடன் மஞ்சுளாவும் கைது செய்யப்பட்டார். கள்ளத்துப்பாக்கி வாங்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்த மஞ்சுளா, தற்போது நாகராஜ் கொலையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த நிலையில் சரண் அடைந்துள்ளார்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon