மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

பல முனைகளில் சமநீதிக்கான போராட்டம்! - அ. குமரேசன்

பல முனைகளில் சமநீதிக்கான போராட்டம்! - அ. குமரேசன்

சமத்துவ நெறி நோக்கி சமூகநீதிப் பயணம் -5

பாகுபாட்டிற்கான பழைய இட ஒதுக்கீடு சுமார் 2,500 ஆண்டுகளாக இருந்து வந்தது. சாதிகளாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளாலும் மக்கள் பிரிந்துகிடந்தது அவர்களை அடிமைப்படுத்துவதற்குத் தோதாக இருந்தது. அரசாங்கப் பணிகளிலும் சமுதாய அதிகாரத்திலும் ஆளுமை செலுத்திய பிராமணர்களின் ஒத்துழையாமையைத் தவிர்க்க எண்ணிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதில் கை வைக்கத் துணியவில்லை.

1882இல், மராத்திப் பகுதியின் கோலாப்பூர் மன்னர் சாகு மகாராஜா, பிராமணர் அல்லாதோருக்கு அரசாங்க வேலைகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் நேரடியாக இட ஒதுக்கீடுச் சட்டம் என்று கொண்டுவராமலே, ராணுவத்தில் பறையர் உள்ளிட்ட ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு வேலை தரப்பட்டது. சிப்பாய் வேலைதான் என்றாலும், அந்தச் சீருடையால் கிடைத்த கம்பீரத் தோற்றமும், பாதுகாப்பும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமாவை. அதே 19ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுசெல்லப்பட்டார்கள். திரும்பியபோது கையில் கொண்டுவந்த பணத்தில் கொஞ்சம் காடு கரை வாங்கிப் போட்டார்கள். இதெல்லாம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

திராவிட இயக்கத்தில், சுயமரியாதை, பெயருடன் சாதி ஒட்டு நீக்கம், பெண்ணுரிமை, பகுத்தறிவு, நாத்திகம் ஆகியவற்றைக் கையிலெடுத்த பெரியாரின் இரண்டு மையமான விருப்பங்கள் அவரது மறைவுக்குப் பின்னால்தான் நிறைவேறின. ஒன்று, அரசாங்க வேலைகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு. இதற்காக மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது அமைக்கப்பட்ட மண்டல் குழு அளித்த அறிக்கை, வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை எதிர்த்து எத்தனை கலவரங்கள் கிளப்பிவிடப்பட்டன! இரண்டு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான ஆணை. தமிழகத்தில் இதற்கான சட்டம் கலைஞர் தலைமையிலான திமுக முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி இப்போதுதான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழகத்தில் வருவதற்கு முன்பாக, கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் செயல்படுத்தி நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவராக மட்டுமல்லாமல், சாதியின் தோற்றுவாய் எதுவெனக் கண்டறிந்த ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர். அவருடைய தலைமையிலான அரசமைப்பு சாசனக் குழுவின் வலுவான பரிந்துரையில்தான், பட்டியல் சாதி மக்களுக்கும் பட்டியல் பழங்குடியினருக்குமான இட ஒதுக்கீடு அரசமைப்பு சாசனத்திலேயே இடம்பெற்றது.

தீர்ப்பின் தெளிவு

இட ஒதுக்கீடு கொள்கையை வேறு வழியில் எதிர்க்க முடியாதவர்கள் அடிக்கடி முன்வைக்கிற கேள்விகள்: “இன்னும் எத்தனை நாள் இட ஒதுக்கீட்டைத் தொடர்வது? இட ஒதுக்கீட்டால் அரசாங்கப் பதவிக்கு வந்தவரின் பிள்ளைக்கும் இட ஒதுக்கீடு தொடர்வது என்ன நியாயம்?” இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறவர்களிடமிருந்தேகூட வேறொரு கேள்வி வருகிறது: பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் வழங்குவது பொருத்தம்தானா?” இதன் இன்னொரு வடிவமாக, “பிற சாதியினரை, அதாவது முற்படுத்திக்கொண்ட பிரிவினரைச் சேர்ந்தோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் என்ன,”என்று கேட்கப்படுகிறது.

இட ஒதுக்கீட்டை, நாடு சுதந்திரம் பெற்ற பின் சில ஆண்டுகளுக்குத்தான் செயல்படுத்தியிருக்க வேண்டும், இப்போதும் அதைத் தொடர்வது அநீதி என்பதாகவும்அவ்வப்போது முணுமுணுப்புகள் ஒலிக்கின்றன. ஆனால், கல்வி வழங்கலுக்கும் வறுமைஒழிப்புக்குமான அரசாங்க நிர்வாகத் திட்டங்களில் ஒன்றல்ல இட ஒதுக்கீடு - குறிப்பிட்ட சிலஆண்டுகளில் எடுத்துவிடுவதற்கு. அடிப்படை நோக்கம் முழுமையாக எட்டப்படும் வரையில்தொடர வேண்டிய ஒரு இயக்கம் அது.

உச்ச நீதிமன்றத்திற்கு வந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரு வழக்கின் தீர்ப்பில், “அரசமைப்புசாசனத்தின் சட்ட உரை 16 (4) ஒரு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. அரசுக் கட்டமைப்பிலிருந்துவிலக்கி வைக்கப்பட்டு வந்துள்ளவர்களின் கல்வி, சமூக, பொருளாதாரப் பின்னடைநிலைமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக அவர்களுக்கு அதிகாரத்தை மறுவிநியோகம்செய்வதில்தான் அதன் தனித்துவம் இருக்கிறது...” என்று நீதிபதி பி.பீ. சாவந்த் கூறியது நினைவில்கொள்ளத்தக்கது (1992).

சாதிப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கும் வரையில், சம அதிகாரம் சாதிக்கப்படும் வரையில், இட ஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும், இட ஒதுக்கீடு தீர்மானிக்கப்படுவது சமூக அடிப்படையில்தானேயன்றி, வருமான அடிப்படையில் அல்ல.

ஏற்கெனவே பார்த்தது போல, சமூகநீதிக்காகவே இட ஒதுக்கீடு. அதேவேளையில் இட ஒதுக்கீடே சமூகநீதியல்ல. மனித உரிமைகளில் தலையாயதாகிய குழந்தை உரிமைகள் மீறப்படுவது ஒரு முக்கியமான சமூகநீதிப் பிரச்சினைதான். குழந்தை உரிமைகள் மீறப்படுவதில் முக்கியமான ஒன்று, குழந்தைத் திருமணம். இதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. சிலப்பதிகாரம் உள்ளிட்ட நமது இலக்கியங்கள் அக்காலத்தில் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டுவிடும் என்பதை காட்டுகின்றன.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இதைத் தடுக்கக் குரல் கொடுத்தார் ராணடே. அவர் இந்து சமய மக்களிடம், இவ்வளவு சிறு குழந்தைகளைத் திருமண உறவில் தள்ளுவதைத் தவிர்க்கலாமே என்று ஒரு வேண்டுகோள்தான் விடுத்தார். உடனே அதற்கு, சங்கர மடத்திலிருந்து எதிர்ப்பு வந்தது. கலாச்சாரப் பாரம்பரியம் அறியாமல் அவர் இப்படிப் பேசுகிறார் என்று விமர்சித்தார் அன்றைய காஞ்சிப் பெரியவர்.

எளியோரின் கல்வி உரிமைக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவரான ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்து இயக்கம் நடத்திவந்தார். மலபாரி என்ற கவிஞர் இங்கிலாந்துக்குச் சென்று, குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார். சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான திலகர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மலபாரி ஒரு பார்ஸி, அவருக்கு எப்படி இந்துக்களின் கலாச்சாரம் தெரியும் என்று தாக்கினார்.

‘உயர்த்தப்பட்ட’ வயது

மாற்றத்திற்கான தொடர் முயற்சியின் விளைவாக, 1909இல் திருமண வயது உயர்த்தப்பட்டது – அதாவது 10 வயதாக இருந்தது 12 வயதாக்கப்பட்டது! இரண்டு வயது மட்டுமே உயர்த்தப்பட்டதில், பிராமணர்களின் கோபத்துக்கு இலக்காக நேரிடும் என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அச்சம் இருந்தது. போராட்டம் தொடர்ந்தது. 1929இல், சாரதா சட்டம் என்று பெயர் பெற்ற, திருமணத்திற்கான குறைந்த வயதுச் சட்டம் கொண்டுவரப்பட்டது – அப்போதும் 14 வயது என்றுதான் உயர்த்தப்பட்டது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுதந்திர இந்திய அரசாங்கத்தால்தான் 18 வயதாக உயர்த்த முடிந்தது.

விதவை மறுமண உரிமை உறுதிப்படுத்தப்பட்டது, மணமுறிவு உரிமை ஏற்கப்பட்டது, தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது, அனைத்துப் பிரிவினருக்குமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வரலாறு உள்ள சமூகநீதி வெற்றிகள் இருக்கின்றன. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை, உடனடிப் பார்வையில் பொருளாதாரக் கோரிக்கை போல இருக்கிறது. ஆனால் அதுவும் ஒரு சமூகநீதிப் பிரச்சினைதான். குழந்தைத் தொழிலாளர் முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டாலும் நடைமுறையில் நாம் செல்கிற இடங்களிலெல்லாம் அவர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம். சட்டங்களில் உள்ள வேறுபாடுகள், குழந்தைத் தொழிலாளர் வயது எது என்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவது தெளிவாக நடந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றுவதற்காகப் போராடுவதும் உறுதியாக நடக்க வேண்டியிருக்கிறது.

சமூகநீதிக்கு அடிப்படை சட்டம் மட்டுமேயல்ல. சமூக மனநிலை மாற்றமே சமூகநீதியை நம்பமாக உறுதிப்படுத்தும். விளிம்புநிலை மக்கள் பொதுச் சமூகத்திற்குத் தெரியாமலே இருப்பது, தன்பாலின ஈர்ப்பாளர்களின் சிக்கலைத் தெரிந்துகொள்ள மறுப்பது என இன்னும் பல சமூக அநீதிகள் இருக்கின்றன. புதிய அநீதிகளும் நாளை நம் கவனத்திற்கு வரக்கூடும்.மதங்கள் சமூகநீதிக்கு எதிரானதாக இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம், அதேவேளையில் எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மை மதங்கள் ஒடுக்கப்படுவது ஒரு சமூக அநீதியேயாகும்.

சமநீதியை நாடுவோர் இவை ஒவ்வொன்றிலும் சம முக்கியத்துவத்துடன் ஈடுபட்டாக வேண்டும், ஏனென்றால், சமூகநீதிப் போராட்டங்களைக் கடந்து வருவதல்ல, அவற்றோடு கலந்து வருவதே சமத்துவ நெறி,

(முற்றும்)

மதங்கள் மறுக்கும் சமத்துவம்!

(கட்டுரையாளர் அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon