மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 நவ 2019

டிக் டாக்கை தடை செய்ய வேண்டும்!

டிக் டாக்கை தடை செய்ய வேண்டும்!

டிக் டாக் செயலியைக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அதனைத் தீவிரமான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போலவே டிக் டாக் என்ற பெயரில் மொபைல் ஆப் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இளம் தலைமுறையினர் முதல் பலரும் திரைப்பட பாடல்களையும், வசனங்களையும், அதுபோலவே பாடியும் பேசவும் செய்வதன் மூலம் தங்களது திறனை உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அதே நேரத்தில், டிக் டாக் செயலி கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகவும் கண்டனங்கள் எழுகின்றன.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக் டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்த வித ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் டிக் டாக் செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையைத் தொலைப்பதும் கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன” என்று தெரிவித்துள்ள ராமதாஸ், டிக் டாக் செயலி அதன் பயனாளிகளிடம் ஒரு விதமான போதையை ஏற்படுத்துகிறது. டிக் டாக் செயலி மூலம் பயனுள்ள தகவல்களையும் பரப்ப முடியும். சிலர் சமுதாயத்துக்குத் தேவையான தகவல்களை இச்செயலி மூலம் பரப்புகின்றனர். ஆனால், அவர்களின் அளவு ஒரு விழுக்காட்டைக் கூடத் தாண்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“உலகின் பெரும்பாலான நாடுகளில் டிக் டாக் செயலி மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிக் டாக்கின் உள்ளடக்கங்கள் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன” என்று தனது அறிக்கையில் கூறியுள்ள ராமதாஸ்,

இளைய தலைமுறையினர் பதின்வயதில் இத்தகைய கவனச் சிதறல்களுக்கும், திசை மாறுதல்களுக்கும் உள்ளானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதைத் தடுக்க டிக் டாக் செயலியை கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக டிக் டாக் செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக் கூறி அவர்களை இந்த போதையிலிருந்து மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 2 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon