மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ஜிஎஸ்டி: விலை குறையும் பொருட்கள்!

ஜிஎஸ்டி: விலை குறையும் பொருட்கள்!

ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்ட 23 பொருட்களுக்கான விலைக்குறைப்பு இன்றுமுதல் அமலாகிறது.

டிசம்பர் 22ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 31ஆவது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திரையரங்கு கட்டணங்கள், தொலைக்காட்சிகள், கணினி திரைகள், பவர் பேங்குகள் போன்றவற்றுக்கு வரிக்குறைப்பு மற்றும் உறையவைக்கப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு என 23 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்டது. தற்போது 28 விழுக்காடு வரிவிதிப்பில் சிமெண்ட், பெரிய தொலைக்காட்சிகள், குளிர்விப்பான்கள் போன்ற ஆடம்பரப் பொருட்கள் மட்டுமே உள்ளன. இதில் கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியப் பொருளான சிமெண்ட் மீதான வரி விதிப்பைக் குறைக்கவும் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

இந்த வரிக்குறைப்புகள் இன்றுமுதல் அமலாகிறது. இதனால் வரி குறைக்கப்பட்ட 23 பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைகிறது. குறிப்பாக திரையரங்கு கட்டணங்களுக்கு முதலில் 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டபோதும், அதன்பிறகு வரி குறைக்கப்பட்டு 18 விழுக்காடாக இருந்தபோதும் திரைப்படங்களுக்கான கட்டணம் 100 ரூபாய்க்கு மேலாகவே இருந்தது. தற்போது 12 விழுக்காடு மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளதால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் இன்றுமுதல் குறையவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்கான வரிகள் 28 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கருவிகளின் விலையும் கணிசமாக குறைகிறது. மூன்றாம் தரப்பு காப்பீடுகளுக்கான வரி விதிப்பு 18 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளதால் காப்பீடு கட்டணம் குறைகிறது. அதேபோல மியூசிக் புக்ஸ், கணினி திரைகள், 32 இன்ச் வரையிலான தொலைக்காட்சிகள், பவர் பேங்குகள், உறைய வைக்கப்பட்ட காய்கறிகள், பளிங்குக் கற்கள், கைத்தடிகள் உள்ளிட்ட பொருட்களும் இந்த விலைக் குறைப்பு பட்டியலில் அடங்கும். புத்தாண்டின் தொடக்கமே பெட்ரோல் டீசல், எரிவாயுக்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைப்புகள் என பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தொடங்குகிறது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon