மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

நடிகர் காதர் கான் காலமானார்!

நடிகர் காதர் கான் காலமானார்!

பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல் நலக்குறைவால் காலமானார்.

உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தி நடிகர் காதர் கான் இன்று (ஜனவரி 1) காலை காலமானார். அவருக்கு வயது 81. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த இவர் மும்பையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 1973ஆம் ஆண்டில் ராஜேஷ் கண்ணாவின் ‘தாக்’ படம் மூலம் காதர் கான் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்தது மட்டுமல்லாமல் 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் சில படங்களை இயக்கியும் உள்ளார். குணச்சித்திர நடிகரான காதர் கான் காமெடி, வில்லன் என பல வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் கனடாவில் உள்ளார். அண்மைக்காலமாக அவருக்கு உடல் நலம் குன்றியிருந்ததால் டொரொண்டோ நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். காதர் கான் உடல் நலம் குன்றிய செய்தியறிந்த பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், காதர் கான் விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அமிதாப் பச்சனும், காதர் கானும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். காதர் கான் விரைவில் குணமடைய வேண்டும் என பல சினிமா பிரபலங்களும் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் உயிரிழந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை டொரொண்டோ நகரில் நடக்கவிருக்கிறது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon