மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

திருவாரூர்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?

 திருவாரூர்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?

திருவாரூர் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வரும் 4ஆம் தேதி மாலை அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்றைய தினமே அதிமுக வேட்பாளர் பரிசீலனையும் நடைபெற இருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் எனவும், 31ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் என்றும் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த கணமே, தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுகவுக்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே வேட்பாளரைத் தேர்வு செய்யத் தயாராகி விட்டன.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஜனவரி 2ஆம் தேதி (நாளை) புதன்கிழமை காலை 10 மணி முதல், 3ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் நேர்காணல் வரும் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “வரும் 4ஆம் தேதி மாலை திமுக சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பதை அறிவிக்க இருக்கிறோம். வெற்றிபெறக் கூடிய வகையில் எங்களுடைய தேர்தல் வியூகம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அதிமுக அறிவிப்பு

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 2ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 3ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon