மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சி.வி. சண்முகம் கருத்து: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

 சி.வி. சண்முகம் கருத்து: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்களை முன்வைத்துள்ள நிலையில், இது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மத்தைக் கண்டறிய ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. விழுப்புரத்தில் நேற்று (டிசம்பர் 31) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்வதை யார் தடுத்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், ஜெயலலிதாவின் மரணத்தைச் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து போலீஸ் விசாரிக்க வேண்டுமெனவும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பதிலேதும் கூறாமல் அவர் சென்றுவிட்டார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் ராதாகிருஷ்ணன். சி.வி.சண்முகத்தின் புகார் தொடர்பாக அவர் முதல்வரிடம் விளக்கம் அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சி.வி.சண்முகத்தின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “அமைச்சர்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை, பிளவு ஏற்படுத்தவும் முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (டிசம்பர் 31) மாலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீர ஆவேசமாக, கோபம் கொப்பளிக்கக் கூடிய வகையில் தந்த பேட்டியைத் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஜெயலலிதா மரணத்தின்போதே, அவருடைய மரண மர்மத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், அது விமர்சிக்கப்பட்டிருந்தது. யாரும் அதற்கு செவி சாய்க்கவில்லை. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும் என்று அமைச்சரே கூறுகிறார். எனவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை. சட்டத் துறை அமைச்சரே கூறியிருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் நாட்டு மக்களுக்கு உண்மை வெளிவரும். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையால் உண்மை வெளிவருவதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், “அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தில் எனக்கும் சிறிது உடன்பாடு உண்டு. அவருடைய கருத்துதான் அதிமுக தொண்டர்களின் கருத்து. வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றிருந்தால் சில அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருக்க முடியுமோ என்ற எண்ணமும் எனக்குத் தோன்றுகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஆஞ்சியோ சோதனை செய்திருந்தால், இதயம் பாதிக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறதா என்று கண்டறிந்திருக்கலாம். அவருக்குச் சுதந்திரமாக செய்ய வேண்டிய பரிசோதனை முறைகளையும், சிகிச்சைகளையும் எது தடுத்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon