மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

ரஜினி: அரசியல் அறிவிப்பின் ஆண்டு நிறைவு; கீதையை நினைவுபடுத்தும் ரசிகர்கள்!

ரஜினி: அரசியல் அறிவிப்பின் ஆண்டு நிறைவு; கீதையை நினைவுபடுத்தும் ரசிகர்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

அமைப்போ, நிறுவனமோ, அரசியல் கட்சியோ ஆரம்பித்தால் அதன் ஓராண்டு நிறைவை விழாவாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த அறிவிப்புக்கே ஆண்டு விழா கொண்டாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 31ஆம் தேதி 2017அன்று சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்றம் தேர்தல் வருவதற்கு முன்னதாக கட்சி தொடங்கப் போறது உறுதி” என்று அறிவித்தார். அது ரஜினி ரசிகர்களுக்கு 2018ஆம் ஆண்டின் புத்தாண்டு பரிசாக அமைந்தது.

ரஜினி அறிவித்து டிசம்பர் 31ஆம் தேதியோடு ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில் இன்று வரை ரஜினியிடம் இருந்து அடுத்தகட்டத்துக்கான கான்க்ரீட் ஸ்டெப் என சொல்லக் கூடிய உறுதியான அடியெடுத்து வைக்கும் நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த வருடப் பிறப்பின்போது அமெரிக்காவில் இருக்கிறார் ரஜினி. அவர் கட்சி ஆரம்பிப்பாரா, இல்லையா என்ற அளவுக்கு ரசிகர்களின் நம்பிக்கை லெவல் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.

“முதலில் எல்லா ஊரிலும் எல்லா தெருவிலும் ரஜினி மக்கள் மன்றங்களை அமைக்கணும்னு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிச்சார் ரஜினி. இந்த வருடத்தில் அந்தப் பணிகள் வேகமா நடந்ததுச்சு. ஆனா, அன்னிக்கு அறிவிச்ச தேதியில இருந்த ரஜினியின் வேகம் படிப்படியா குறையற மாதிரியே இருக்கு. சட்டமன்றத் தேர்தல் வர்றதுக்கு முன்னாடி கட்சி ஆரம்பிக்கிறோம்னு ரஜினி சொன்னார். எங்களுக்குத் தெரிஞ்சி தேர்தல் கமிஷன் அறிவிப்புக்காகக் கட்சிகள் காத்திருக்கும். ஆனால், கட்சி ஆரம்பிக்கிறதையே தேர்தல் கமிஷன் அறிவிப்பை வெச்சி முடிவு பண்ணலாமா?

இந்த ஒரு வருஷத்துல ரஜினிக்கு காலா, 2.0 படங்கள் ரிலீஸாகிடுச்சு. பேட்ட படத்தை முடிச்சிட்டாரு. ஆனால் ரசிகர்கள்தான் இருக்கிற மத்த முக்கிய வேலைகளை விட்டுட்டு ரஜினி மக்கள் மன்றத்துக்காக ஒரு வருடமா உழைச்சுக்கிட்டிருக்கோம். என்ன பண்ணுவாருன்னே தெரியலையே?” என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர்.

ரஜினிக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியபோது, “சட்டமன்றத் தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிப்பதாக ரஜினி சொன்னார். ஆனால், ரஜினி கட்சி ஆரம்பித்தாலே சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் என்ற நிலைமை இன்னும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றிலும் அதீதமாக யோசிக்கும் ரஜினி, இந்த விஷயத்தில் மிக நிதானமாக யோசிப்பது ரசிகர்களுக்கு இடையே ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஜனவரி மாதம் பேட்ட ரிலீஸ், அடுத்து முருகதாஸ் படம் என நாடாளுமன்றத் தேர்தல் வரையில் ரஜினி சினிமாவில் பிசியாகிவிடுவார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துவிட்டு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவிலேயே ரஜினி சில மாற்றங்களைச் செய்தாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.

இப்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினி அங்குள்ள மக்கள் மன்றப் பொறுப்பாளர்களோடு சில சந்திப்புகள் நடத்துவதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கே கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக் கொண்டாட்டத்தில் பலர் இருந்ததால், தனது சந்திப்புகளை சில நாட்களுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.

“யுத்தம் செய்... ஜெயிச்சா நாடாளுவே, தோத்தா வீர சொர்க்கத்துக்கு போவே. யுத்தம் செய்ய மாட்டேன்னு போயிக்கிட்டே இருந்தா உன்னை கோழைனு சொல்லுவார்கள்” - பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ரஜினி கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி சொன்ன வாசகங்கள் இவை. இந்த வாசகங்களைச் சொல்லி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அவை ரஜினிக்கே கச்சிதமாகப் பொருந்தி நிற்கின்றன என்கிறார்கள் விரக்தியில் இருக்கும் ரசிகர்கள்.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon