மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

இன்று முதல் தடை!

இன்று முதல் தடை!வெற்றிநடை போடும் தமிழகம்

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தமிழகத்தில் தடை அமலுக்கு வருகிறது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் ஜூன் 25ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை அமலுக்கு வரவிருந்தது. இதன்படி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், ஸ்ட்ராக்கள் போல ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தடைக்கு இயற்கை ஆர்வலர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் உயர் நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தினர். எனினும் நீதிமன்றம் தடைக்கு ஆதரவாகவே இருந்தது.

இத்தடையிலிருந்து பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள், துணிப் பைகளைப் பயன்படுத்துமாறு வர்த்தகர்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று (டிசம்பர் 31) தடையை அமல்படுத்துவது பற்றி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தடையைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ராஜேந்திர ரத்னு, சந்தோஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் எவ்வளவு அபராதம் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon