மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ப்ளஸ் 2: இனி ஒரே புத்தகம்!

ப்ளஸ் 2: இனி ஒரே புத்தகம்!

பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு இனி ஒரே புத்தகமாக வழங்க தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள கல்வித் திட்டத்தின்படி, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களுக்கு இரண்டு பாகங்களாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய பாடத்திட்டத்தின் காரணமாக 11ஆம் வகுப்பு மாணவர்களிடையே படிப்பு சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மனஅழுத்தம் ஏற்படுவதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.

மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களுக்கு இனிமேல் ஒரே புத்தகமாக மாற்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாடத்திட்டக் குழுவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவம் ஏப்ரல் மாதத்தில் முடியவுள்ளதாகவும், அதன் பிறகு அச்சுக்குச் செல்லும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

மாணவர்களின் தேர்வு சுமையைக் குறைப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 11, 12ஆம் வகுப்புகளில் உள்ள நான்கு முக்கிய பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon