மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

ரிசர்வ் வங்கி கையிருப்பில் கைவைக்கத் தேவையில்லை: அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி கையிருப்பில் கைவைக்கத் தேவையில்லை: அருண் ஜேட்லி

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருந்து நிதி பெற வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 31) நாடாளுமன்ற மக்களவையில், மானியங்களுக்கான துணை கோரிக்கைகள் பற்றிய விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ஜேட்லி, “நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதில் இதற்கு முந்தைய அரசுகளை விட இப்போதைய அரசு சிறந்ததாகவே இருக்கிறது. எனவே, நாம் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் கேட்கும்படியான தேவை இப்போது இல்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது உரையில், “ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பு தரும் விவரங்களின்படி பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் மொத்த மூலதனத்தில் 8% கையிருப்பாக வைத்திருக்கும். சில நாடுகளின் மத்திய வங்கிகள் 14% வைத்திருக்கும். ஆனால் நமது நாட்டின் ரிசர்வ் வங்கி 28% கையிருப்பாக வைத்திருக்கிறது.

இந்தக் கையிருப்பு நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமா அல்லது மாநிலங்களுக்கு வழங்கலாமா என்பதை நிபுணர் குழுவானது முடிவெடுக்கும்” என்றும் கூறியுள்ளார் அருண் ஜேட்லி.

இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போது 9.59 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பாக உள்ளது. இந்த நிதியில் இருந்து தேர்தல் ஆண்டுக்கான செலவுக்காக மத்திய அரசு சில லட்சம் கோடிகளைக் கேட்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இதை ஒட்டி ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். இதையடுத்து பணமதிப்பழிப்பு திட்டத்தில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்த சக்திகாந்த தாஸ் டிசம்பர் 10ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon