மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் தலைமறைவு: காவல் துறை!

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் தலைமறைவு: காவல் துறை!

சாலை விபத்தில் பெண் வழக்கறிஞர் பலியான வழக்கில் உயர் நீதிமன்றத் தடையை மீறி ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சாலை விபத்தில் பெண் வழக்கறிஞர் சுனந்தா பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கரண் மற்றும் மதன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜாமீன் பிணை செலுத்த மாணவர்கள் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தடை உத்தரவு குறித்து தகவல் தெரிவித்து எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தும், உயர் நீதிமன்ற உத்தரவுக்குக் காத்திருக்காமல் இருவரையும் எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது.

இதைத் தொடர்ந்து எழும்பூர் நீதிபதிக்கு எதிராக சுனந்தாவின் கணவர் சுரேந்தர் நாயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கு, முகாந்திரம் இருப்பதால் நான்கு வாரங்களில் மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க எழும்பூர் நீதிபதி கோபிநாத்துக்கு உத்தரவிட்டது. மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 31) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முதல் குற்றவாளியான கரண் தலைமறைவாகி விட்டதாகவும், இரண்டாம் குற்றவாளியான மதன் சரணடைந்து விட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தலைமறைவான கரணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon