மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜன 2019

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

மாணவர்களுக்கான புதிய தொடர்!

உங்கள் திறமை எது என்று அறிவீர்களா?

புத்தாண்டில் புதிதாகத் தொடங்கி இருக்கும் இந்தக் கட்டுரைத் தொடரைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்காகவே பிரத்யேகமாக எழுதப் போகிறேன் என்றாலும், இதில் பொதுவாகக் கல்விச் சூழலில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் தேவையான பல கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

முதலில் நம் வாழ்க்கையின் நம்பிக்கைக்கு அஸ்திவாரமான திறமை குறித்துப் பேசுவோம்.

திறமை என்றால் என்ன?

நாம் தினமும் பள்ளியிலும், வீட்டிலும் எத்தனையோ வேலைகளைச் செய்கிறோம்... விளையாடுகிறோம்... புத்தகங்கள் படிக்கிறோம்... நோட்டில் எழுதுகிறோம், படங்கள் வரைகிறோம். இப்படியாக இன்னும் பல வேலைகளைச் செய்கிறோம்.

பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், டென்னிஸ் கிளாஸ், இந்தி கிளாஸ் எனப் பல வகுப்புகளுக்குச் சென்றும் நம் தனித்திறமைகளை வளர்த்தெடுக்கிறோம்.

இதில் நமக்கு எந்த வேலையைச் செய்யும்போது மனதுக்குப் பிடித்திருக்கிறதோ, நம் மனம் திருப்தி அடைகிறதோ, சந்தோஷம் உண்டாகிறதோ அந்த வேலைதான் நம் திறமை.

ராஜி என்ற மாணவிக்குப் படம் வரையும்போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்றும், கண்ணன் என்ற மாணவனுக்குக் கவிதைகள் எழுதும்போது அவரது மனம் சந்தோஷமாக இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

ராஜிக்குள் படம் வரையும் திறமை இருக்கிறது, கண்ணனுக்குள் எழுதும் திறமை இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, மொபைலில் கேம்ஸ் விளையாடும்போது ரொம்ப ரொம்ப ஜாலியாக இருக்கிறது என்பதற்காக, டிவி பார்ப்பதையும் கேம்ஸ் விளையாடுவதையும் நம் திறமை என்று சொல்ல முடியாது. அவை பொழுதுபோக்கு அம்சங்கள்.

படிக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, படிக்கவே போர் அடிக்கிறது என்பதற்காக, படிக்கும் திறமை நமக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது. படிப்பது என்பது நம் கடமை; திறமை அல்ல.

கடமை சார்ந்தவை அனைத்தும் செய்தே ஆக வேண்டிய கட்டாயச் செயல்கள். அதனால்தான் படிப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கிறது.

திறமை சார்ந்த அனைத்துமே நமக்குப் பிடித்த செயல். அதனால்தான் அதைச் செய்வதற்கே ஜாலியாக இருக்கிறது.

சென்ற மாதம் ஒரு பள்ளிச் சிறுமியின் அம்மாவைச் சந்தித்தேன். 15 வயதுப் பள்ளிச் சிறுமி. நன்றாகப் படிக்கும் பெண். கொஞ்ச நாட்களாய் படிப்பில் நாட்டம்போய் வீட்டில் எதற்கெடுத்தாலும் அம்மாவுடன் சண்டை.

தன் பெண்ணை உளவியல் ரீதியாகக் கையாளுவதில் சிக்கல் என்பதால் அந்த அம்மா என்னைத் தொடர்புகொண்டார்.

அந்தப் பெண்ணுடன் பேசினேன். அவள் ம்..ம்… என்று சொல்லிக்கொண்டிருந்தாளே தவிர... வாயைத் திறக்கவில்லை.

ஒரு கட்டத்தில் ‘படிப்பு தவிர உனக்கு என்னதான் பிடிக்கும்… உன் திறமை என்ன…’ என்றேன்.

எதிர்பார்க்காத ஒரு பதிலைச் சொன்னாள்.

‘சோஷியல் சர்வீஸ்…

‘அப்படியா… என்ன மாதிரி சோஷியல் சர்வீஸ்?’ எனக் கேட்டேன்.

நிறைய பேசினாள். நாட்டில் நடக்கும் லஞ்சம், சுற்றுச்சூழல் பாதிப்பு என அவள் வயதில் நான்(ம்) யோசிக்காததை எல்லாம் பேசினாள். ஆனால், அதில் அதிகப்பிரசங்கித்தனமோ, அதிமேதாவித்தனமோ இல்லை. உண்மையிலேயே அவளுக்கு சோஷியல் சர்வீஸில் ஈடுபாடு இருந்தது. சில சோஷியல் சர்வீஸ்களில் ஈடுபட்டும் வருகிறாள்.

மற்றவர்களுக்கு உதவுவதும் நமக்குள் இருக்கும் சந்தோஷத்தை வெளிக்கொணரும் ஒருவகைத் திறமைதான். நாம் எந்த வேலையைச் செய்யும்போது நம் அறிவும் மனதும் ஒருசேரப் பூரிப்படைகிறதோ அதுதான் நம் திறமை.

கற்போம்... கற்பிப்போம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வியாழனன்று...)

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

செவ்வாய் 1 ஜன 2019