மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி!

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி!

சென்னை ஐஐடியில் ஜனவரி 3 முதல் 6 வரையில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) சார்பில் ‘சாஸ்ட்ரா-2019’ என்ற பெயரில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு ஜனவரி 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாஸ்ட்ரா- 2019 தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு அவர்களின் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளைப் பார்வைக்கு வைக்கவுள்ளனர். இந்தக் கண்காட்சியில் சுமார் 60,000 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணினி அறிவியல், எந்திரவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 45க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் மற்றும் வல்லுநர்கள் இக்கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். புகழ்பெற்ற செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் முதல் நாளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார் என்றும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய அளவிலான இந்த தொழில்நுட்பக் கண்காட்சி குறித்து சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி டிசம்பர் 31ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவர்களின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது. அதுமட்டுமின்றி உலக அளவில் அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த மாநாடுகளும் இந்த நிகழ்ச்சியில் நடைபெறவுள்ளது” என்றார்.

இந்தச் சந்திப்பின்போது, ஐஐடி உணவகத்தில் மாணவர்களுக்கிடையே பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாக பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon