மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

துண்டு துண்டாக்கப்பட்ட கஷோகி: அதிர்ச்சி வீடியோ!

துண்டு துண்டாக்கப்பட்ட கஷோகி: அதிர்ச்சி வீடியோ!

ஜமால் கஷோகி வெட்டித் துண்டு துண்டாக்கப்பட்டு பைகளில் கொண்டுசெல்லப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தில் சர்வதேச அளவில் சவுதி அரேபியா விமர்சனங்களில் சிக்கியுள்ளது. கஷோகி கொலை விவகாரத்தால் தூதரக உறவுகள் ரீதியாக சவுதிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகச் சில நாட்களுக்கு முன்பு சவுதி அமைச்சரவையும் மாற்றப்பட்டது. இதில் வெளியுறவுத் துறை உட்பட முக்கிய பாதுகாப்பு மற்றும் அரசியல் பதவிகளில் இருப்பவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்புத் தலைவர் ஆகியோரும் மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், துருக்கியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி சேனல் ஒரு சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் சில நபர்கள் பைகளிலும், பெட்டிகளிலும் கொலை செய்யப்பட்ட ஜமால் கஷோகியின் உடல் பாகங்களை கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது. இரண்டு பெரிய பைகளையும், ஐந்து சூட்கேஸ்களையும் வீடியோவில் இருக்கும் ஆட்கள் எடுத்துச் செல்கின்றனர். அப்பைகளில் ஜமால் கஷோகியின் வெட்டப்பட்ட உடற்கூறுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தில் ஜமால் கஷோகி பணிபுரிந்துவந்தார். அக்டோபர் 2ஆம் தேதியன்று அவர் இஸ்தான்புலில் இருக்கும் சவுதி கான்சுலேட்டில் நுழைந்தபோது அங்கு அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு சவுதியைச் சேர்ந்த 15 ஆட்களால் வெட்டித் துண்டு துண்டாக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவரது உடல் பாகங்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டுவிட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. சவுதி கான்சுலேட் அருகிலேயே ஜமால் கஷோகியின் வீடு உள்ளது. கான்சுலேட், அவரது வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கஷோகியின் உடல் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon