மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கடந்தாண்டில் 94 நிருபர்கள் கொலை!

கடந்தாண்டில் 94 நிருபர்கள் கொலை!

உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டில் மட்டும் 94 நிருபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்தான அறிக்கையொன்றை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் நேற்று (டிசம்பர் 31) வெளியிட்டது. அதில், 2017ஆம் ஆண்டு புகைப்பட நிருபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 84 நிருபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.

2018ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 94 நிருபர்களில் ஆறு பேர் பெண்கள். அவர்களில் மூன்று பேர் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் மட்டும் 16 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். மெக்ஸிகோவில் சமூக விரோதச் செயலுக்கு எதிராகச் செய்தி வெளியிடும் நிருபர்கள் குறிவைத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

மெக்ஸிகோவில் 11 பேரும், ஏமனில் 9 பேரும், சிரியாவில் 8 பேரும், இந்தியாவில் 7 பேரும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தலா 5 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் போர் செய்திகளைச் சேகரிக்கும்போது நிருபர்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்படுவது மிகவும் பரிதாபத்துக்குரியது. சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைதான் 2018ஆம் ஆண்டிலேயே கொடூரமான கொலையாகும் என சர்வதேசப் பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

1990ஆம் ஆண்டிலிருந்து சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில், 2006ஆம் ஆண்டில் 155 நிருபர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுதான், அதிகமான எண்ணிக்கையாகும். இதையடுத்து 2012ஆம் ஆண்டில் 121 நிருபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon