மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

புத்தாண்டு: பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்!

புத்தாண்டு: பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் மட்டும் 15,000 போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக சென்னை மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக தமிழகம் முழுவதும் புத்தாண்டின்போது பைக் ரேஸ் நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதுபோன்று , புத்தாண்டு சமயத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அனைத்து மாவட்டக் காவல் துறைக்கும் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னையில் மட்டும் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசாரை ஈடுபடுத்தவுள்ளதாக நேற்று (டிசம்பர் 30) மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று (டிசம்பர் 31) இரவு 9 மணியில் இருந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் புளியந்தோப்பு உட்பட மொத்தம் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர 25 சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையான உதவிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிண்டி, அடையாறு, தரமணி, துரைப்பாக்கம், நீலாங்கரை, ஆகிய பகுதிகளில் பைக் ரேஸை தடுக்க 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத்தலங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மெரினா, சாந்தோம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மணலில் செல்லக் கூடிய வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடற்கரை மணல் பகுதிகளில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். குதிரைப் படைகள் பாதுகாப்புக்காக கடற்கரை ஓரங்களில் பயன்படுத்தப்படும்.

குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டுமின்றி குற்ற ஆவணக் காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பு போன்றவற்றின்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு மொபைல் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், விபத்தில் இழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இழப்பில்லா புத்தாண்டு கொண்டாடவும் மாநகரக் காவல் துறை முடிவெடுத்துள்ளது.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon