மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு அமெரிக்காவில் என்ன சிகிச்சை நடக்கிறது?

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு அமெரிக்காவில் என்ன சிகிச்சை நடக்கிறது?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இரண்டு படங்கள் வந்து விழுந்தது. டவுன்லோடு செய்து பார்த்தோம். விஜயகாந்த் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய படம் அது.

தொடர்ந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ்ஜும் வந்து விழுந்தது. “விஜயகாந்துக்கு என்னாச்சு? என்ற கேள்வி தேமுதிக தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்தபடியே இருக்கிறது. ‘நல்லா இருக்காரு... அவருக்கு எதுவும் பிரச்சினை இல்லை. விரைவில் வந்துடுவாரு...’ என்பது மட்டுமே விஜயகாந்த் குடும்பத்தினர் சொல்லி வரும் தகவல். ஆனால், கட்சிக்காரர்களோ ‘நல்லா இருக்கிறவரு எதுக்கு அமெரிக்காவுக்கு போகணும்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அதே கேள்வியுடன் விஜயகாந்துக்கு நெருக்கமானவர்கள் சிலரோடு பேசியபோது கிடைத்த தகவல்களை அப்படியே தருகிறேன்.

‘சென்னையில் இருந்து அமெரிக்கா கிளம்பும் போது, வீல் சேரில் அமர்ந்தபடி அடையாளமே தெரியாதபடிதான் கிளம்பினார் விஜயகாந்த். வெளிநாட்டுக்கு செல்லும் போது போர்டிங் பாஸ் சம்பந்தப்பட்ட நபர்தான் வாங்க வேண்டும். முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது, அவரது மனைவி மல்லிகா மாறன் அமெரிக்கா போனார். அந்த சமயத்தில், டி.ஆர்.பாலு அவருக்கு போர்டிங் பாஸ் வாங்கப் போனார். ஆனால் கொடுக்கவில்லை. மல்லிகாவே போய்த்தான் அவருக்கான போர்டிங் பாஸ் வாங்கினார். அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட்.

இந்தமுறை விஜயகாந்த் அமெரிக்கா கிளம்பும்போது போர்டிங் பாஸ் கூட போய் வாங்கும் நிலையில் அவர் இல்லை. தலையை குனிந்தபடியேதான் வீல் சேரில் உட்கார்ந்தபடி சென்றார். விமானத்தில் கூட வீல் சேரில் அழைத்துக் கொண்டு போய்தான் ஏற்றினார்கள். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் உதவியோடுதான் விஜயகாந்துக்கான போர்டிங் பாஸ் உள்ளிட்ட பயண க்ளியரன்ஸுகள் கிடைத்தன. அப்படிப் போன விஜயகாந்த் இப்போது போட்டோவில் உற்சாகமாக கிறிஸ்துமஸ் மரத்தின் முன் அமர்ந்து கையசைக்கிறார்.

விஜயகாந்துக்கு கிட்னியில்தான் பிரச்சினை. இதற்காகத்தான் ஏற்கெனவே சிங்கப்பூர் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அந்த சமயத்தில் சிங்கப்பூர் மருத்துவர்கள், கிட்னியை மாற்ற தேவை இல்லை என மருந்து மட்டும் கொடுத்தார்கள். அப்போது, இதயத்தில் உள்ள பிரச்சினைக்காக ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. கிட்னி பிரச்சினைக்காக விஜயகாந்த் மருந்து எடுத்துக் கொண்டாலும் அது சரியாகவில்லை. சென்னையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசையின் கணவர், சௌந்தர்ராஜன் தான் விஜயகாந்துக்கு சிறுநீரக சிகிச்சை செய்து வந்தார். கிட்னி மாற்றியே ஆக வேண்டியது கட்டாயம் என அவர்தான் விஜயகாந்துக்கு அட்வைஸ் கொடுத்தார். விஜயகாந்துக்கு கிட்னி பிரச்னை இருப்பது தெரிந்து அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனையை அவருக்கு பரிந்துரை செய்தவர் ரஜினி.

கடந்த மார்ச் மாதம் இதற்காகத்தான் விஜயகாந்த் அமெரிக்காவுக்குப் போனார். ஆனால் அப்போது, அவருக்கான கிட்னி கிடைக்கவில்லை. அமெரிக்க மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்து வந்தார். இப்போது விஜயகாந்த் குரூப்பிற்கு ஏற்ற கிட்னி தயாராக இருப்பதாக அமெரிக்க மருத்துவமனையில் இருந்து மெயில் வந்திருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்கா கிளம்பிப் போயிருக்கிறார் விஜயகாந்த்.

அங்கே மருத்துவமனையில் அடிப்படை டெஸ்ட்டுகள் எடுத்து முடிந்ததும், நண்பர் ஒருவரின் வீட்டில்தான் தங்கியிருக்கிறாராம். ஜனவரி மாத இறுதிக்குள் விஜயகாந்துக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடக்கும் . அதன் பிறகு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொண்டு, அங்கேயே ரெவியூ முடித்துக் கொண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவார் என்று சொல்கிறார்கள்.ஆனால், விஜயகாந்த் குடும்பத்தினரோ, ‘தைராய்டு பிரச்சினைக்கான சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா போயிருக்கிறோம்’ என்று சொல்லி வருகிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“ஏன் தமிழகத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் என்ன சிக்கல்?’ என்று கேட்டது ஃபேஸ்புக்.

பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப். “தமிழகத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் பல சிக்கல் இருக்கிறது. குடும்பத்தினர்தான் கிட்னி கொடுக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே அரசு மருத்துவமனையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இது இல்லாமல் அறுவை சிகிச்சை நடந்தால் அது சட்டப்படி குற்றம் என்பதால், தமிழ்நாட்டில் சிகிச்சை வேண்டாம் என தவிர்த்துவிட்டது விஜயகாந்த் குடும்பம். அத்துடன், ரஜினியும் அமெரிக்கா மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் என தொடர்ந்து விஜயகாந்திடம் சொல்லி வந்திருக்கிறார்.” என்று முடிந்தது பதில். வாட்ஸ் அப் ஆஃப்லைனில் போயிருந்தது.

.

மேலும் படிக்க ...

கொங்கு: ஸ்டாலின் போடும் கணக்கு!

கொங்கு கூட்டணி: எடப்பாடி போடும் கணக்கு!

தொடங்கியது பாமக பொதுக்குழு!

தோல்வியை தள்ளிப்போட்ட ஆஸ்திரேலிய அணி!

பாஜக பிரதமர் வேட்பாளர் யார்? ஆர்.எஸ்.எஸ். ரகசிய ஆலோசனை!

.

சனி, 29 டிச 2018

அடுத்ததுchevronRight icon