மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

ஒன்றியத்திடம் நிதி கேட்கும் தமிழ்நாடு!

ஒன்றியத்திடம் நிதி கேட்கும் தமிழ்நாடு!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தமிழ்நாட்டுக்கு ரூ.4,172.2 கோடி நிதி ஒதுக்குமாறு கேட்டுள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று (டிசம்பர் 27) டெல்லியில் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குமாறு எஸ்.பி.வேலுமணி அருண் ஜேட்லியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதி தொடர்பான மனு ஒன்றையும் ஜேட்லியிடம் அவர் கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய செயல் திறன் நிதி ரூ.560.15 கோடி, நடப்பு நிதியாண்டுக்கான அடிப்படை நிதி ரூ.3,612 கோடி மற்றும் 2017-18 ஆண்டுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட ரூ.4,172.2 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவருடன் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவரும் உடனிருந்தனர்.

இதற்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஒன்றிய கிராமப்புற மேம்பாட்டுக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமரை எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளுக்குத் தேவையான நிதியைத் தமிழகம் ஒதுக்குவதற்கு ஏதுவாக உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனுவை தோமரிடம் அளித்தார். மேலும், 2017-18ஆம் நிதியாண்டில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,516 கோடி மத்திய நிதிக் குழுவிலிருந்து நிதி ஒதுக்கியதற்காக தோமரிடம் நன்றி தெரிவித்தார் எஸ்.பி.வேலுமணி.

வெள்ளி, 28 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon