மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 4 ஆக 2020

திருமழிசை வரை மெட்ரோ நீட்டிப்பு!

திருமழிசை வரை மெட்ரோ நீட்டிப்பு!

இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது திருமழிசை வரையில் நீட்டிக்கப்படவுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ரூ.20,000 கோடிக்கும் மேலான நிதியுதவியுடன் சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமையவுள்ள வழித்தடத்தை திருமழிசை வரை நீட்டிப்பதற்கான திட்டம் இருப்பதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சென்னையின் மேற்குப் பகுதியில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமழிசை நகருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், “இதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளன. ஆனால், திட்டத்தை நிறைவேற்றுவது எவ்வளவு சாத்தியம் என்பதைப் பார்ப்போம். திருமழிசை வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்” என்றார்.

திருமழிசையில் சேட்டிலைட் டவுன்ஷிப் அமைக்கப்படும் என்று 2011ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 311 ஏக்கர் நிலத்தில் ரூ.2,160 கோடிச் செலவில் 12,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன. சென்னையில் அதிகரித்துவரும் வீட்டுமனை விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்னை நகருக்குள் சொந்த வீடு வாங்குவதே கடினமாகிவரும் சூழலில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடு கிடைக்கச் செய்யும் வகையில் சென்னையை ஒட்டியுள்ள வெளிப்புறப் பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலி நிலங்களில் வீடு கட்டித்தரும் விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் 12,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் திருமழிசைப் பகுதியில் மக்கள் குடியேறவுள்ளனர் என்பதைக் கருத்தில்கொண்டே மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கச் சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

புதன், 26 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon