மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

பன்னீருக்கு அடைக்கப்பட்ட முதல் கதவு!

பன்னீருக்கு  அடைக்கப்பட்ட முதல் கதவு!வெற்றிநடை போடும் தமிழகம்

ஆரா

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் - 3

செல்லும்வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம், உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்’-இந்தப் பாடல்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெடிகேட் செய்திருக்கும் பாடல்.

இன்றுநேற்றல்ல,அணிகள் இணைப்புக்கு முன்பிருந்தே இதே பாடலைத்தான் டெடிகேட் செய்து வருகிறார் எடப்பாடி என்கிறார்கள் அமைச்சர்கள் வட்டாரத்தில்.

பன்னீரை கட்சிக்குள் சேர்க்க வைத்து அவரை படிப்படியாய் பலவீனப்படுத்துதல் என்ற மெகா ப்ளானோடுதான் இதையெல்லாம் செய்யத் தொடங்கியது எடப்பாடி தரப்பு.

பன்னீர் எப்படியெல்லாம் பலவீனப்படுத்தப்பட்டார்... அதன் உச்சகட்டமாகத்தான் அவரது தம்பி பதவிக்கே வேட்டு வைக்கும் அறிவிப்பில் கையெழுத்து போடும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதுதான் அதிமுகவின் நடப்பு.

இதற்கு நாம் கொஞ்சம் ஒரு வருடம் காலத்துக்கு பயணிக்க வேண்டும்.

பன்னீர் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்தபோது அவரிடம் பதவியில்லை. ஆனால், அவரது பசுமைவழிச் சாலை வீட்டில் கூட்டம் இருந்தது. அவர் பொதுக்கூட்டங்களுக்கு சென்றால் கூட்டம் வழிந்தது. இதையெல்லாம் தாண்டி அவர் முகத்தில் அவருக்கே உரிய முத்திரையான அந்த புன்னகை இருந்தது.ஆனால், அணிகள் இணைப்பு என்ற விஷயத்துக்குள் அடியெடுத்து வைத்த பின்னால் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது.

பன்னீரை சேர்த்துக் கொள்ள வேண்டும், அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று டெல்லியின் அழுத்தம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு உதாரணம், பன்னீர் பதவியேற்றுக் கொண்டிருக்கும்போதே மோடியின் ட்விட்டில் வாழ்த்துகள் மெசேஜ் அப்டேட் செய்யப்பட்டதுதான். அந்த அளவுக்கு அவர் டெல்லியின் செல்லப் பிள்ளையாக இருந்தார்.

ஆனால் டெல்லியின் செல்லபிள்ளை யார் என்பதில் பன்னீருக்கும், எடப்பாடிக்கும் நடந்த போட்டியில் மெல்ல மெல்ல எடப்பாடி முன்னே ஓடத் தொடங்கினார்.

அணிகள் இணைப்புக்கு முன்னர் அப்போதைய தமிழக அரசு பன்னீரின் செல்வாக்கு பற்றி உளவுத்துறை மூலம் ஓர் ஆய்வு நடத்தியது. அந்த டீமில் பன்னீரின் சமூகத்தினர் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஏனென்றால் அப்படி செய்தால் ஆய்வு ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்துக் கொடுத்துவிடுமோ என்ற சந்தேகம்தான்.

அப்படி நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்த தகவல் எடப்பாடி தரப்பை அதிர்ச்சிப் படுத்தியது.

“ ஓ.பன்னீரின் செல்வாக்கு தமிழக மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் நல்ல நிலையில் உள்ளது. இந்தக் காலத்தில் பதவியைத் தூக்கி எறிந்த ஒரு மனுஷன் என்று பன்னீர் பற்றி பப்ளிக்கில் பேசுகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர் சார்ந்த சமுதாயத்தில் பெரும்பாலானோர் பன்னீரோடு திரண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பொதுத் தலைவராக பன்னீர் பார்க்கப்படுகிறார்” என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.

அந்த ஆய்விலேயே இன்னொரு உட்பிரிவும் இருக்கிறது.”ஒருவேளை பன்னீர் ஆட்சியோடு சேர்ந்துவிட்டால் அவரது இமேஜ் என்னாகும்?”

”இதற்கு நேர்மாறாய் போகும். அவரது இமேஜ் காலியாகும், பதவிக்காக மீண்டும் சரண்டராகிவிட்டார் என்ற அவப்பெயர் உண்டாகும்”என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.

இந்த முடிவுக்குப் பின்னர்தான், ஓ.பன்னீரின் ஒவ்வொரு கதவுகளாக அடைக்க முயற்சி செய்கிறது அன்றைய எடப்பாடி அரசு. ஒரு பக்கம் அவரை அரசில் சேர்ப்பது, இன்னொரு பக்கம் அதன் மூலமே அவரது அரசியல் செல்வாக்கை நிலை குலைய வைப்பது. இது தெரிந்து பன்னீரும் ஒருபக்கம் தன் அணியினரோடு விவாதத்தில் இருந்தார்.

பன்னீர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே மணல் விஷயத்தில் அவரது குடும்பத்தினர் குறிப்பாக ஓ.ராஜாவின் பங்கு அதிமுகவில் அனைவருக்கும் தெரியும்.

“மாவட்டங்கள் முழுதும் இருக்கும் அரசு மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட அதிகாரி கையெழுத்திட்டு கொடுக்கப்படும் ட்ரிப் ஷீட் என்பது முக்கியமானது. அப்போதெல்லாம் எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி, மணல் அள்ளுவதற்கான லாரிக்கான டிரிப் ஷீட் வாங்க வேண்டுமென்றால் பெரியகுளத்துக்குதான் போக வேண்டும். ராஜாவைப் பார்த்துவிட்டுத்தான் டிரிப் ஷீட்டை வாங்க வேண்டும். இதுதான் நிலைமை. இதில் பெரும் கோடிகள் புரண்டதாக பேச்சு உண்டு.

பன்னீர் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும்போதும் இது தொடர்ந்தது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதாவது தினகரனுடன் உறவில் இருந்த எடப்பாடி முதல் முறையாக இந்த ட்ரிப் ஷீட்டில் கை வைத்தார். அதாவது தமிழகம் முழுக்க இருக்கும் ட்ரிப் ஷீட்டுகள் வாங்க இனி பெரியகுளம் செல்ல வேண்டாம் என்ற நிலையை உருவாக்கினார். தேனி மாவட்டத்துக்கான ட்ரிப் ஷீட் மட்டும் பெரியகுளத்தில் கிடைக்குமாறு சுருக்கினார் எடப்பாடி. இதுதான் பன்னீருக்கு அடைக்கப்பட்ட முதல் கதவு” என்கிறார்கள் மணல் வட்டாரத்தில்.

(பயணிப்போம்)

மினி தொடர்-1

மினி தொடர்-2

புதன், 26 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon