மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 டிச 2018

மீண்டும் பொன்மாணிக்கவேல் மீது புகார்!

மீண்டும் பொன்மாணிக்கவேல் மீது புகார்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்மாணிக்கவேல் மீது மூன்றாம் முறையாக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர் அவரது தலைமையின் கீழ் பணிபுரிந்த போலீசார்.

2017ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்தது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த ஆர்.தமிழ்சந்திரன் பணிமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரயில்வே காவல் துறை ஐஜி பொன்மாணிக்கவேல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் பின்னர், சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன்மாணிக்கவேல் தலைமையிலான பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

சிறப்பு அதிகாரியாக நியமனம்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிலைகள் மீட்பு நடவடிக்கைகள் ஊடகங்களில் வெளியாகி வந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று ஐஜி பொன்மாணிக்கவேல் ஓய்வு பெறுவதாக இருந்தது. அதே நேரத்தில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டுமென்று சில கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தன.

கடந்த 30ஆம் தேதியன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம். அதோடு, பொன்மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற மேல் முறையீட்டு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பொன்மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்துச் சில கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். சில கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தன.

பொன்மாணிக்கவேல் மீது புகார்

கடந்த 18ஆம் தேதியன்று டிஜிபி ராஜேந்திரனைச் சந்தித்தனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 13 போலீசார். இவர்கள் அனைவரும், தங்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து விடுவிக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர். டிசம்பர் 19ஆம் தேதியன்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோ தலைமையில் 12 அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அதில், ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான பணியின்போது மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், தங்களை வேறு காவல் பணிக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பொன்மாணிக்கவேல், வேலைப்பளுவினால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறுபவர்கள் போலீஸ் வேலைக்குத் தகுதியற்றவர்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 24) மாலையில் மீண்டும் ஏடிஎஸ்பி இளங்கோ தலைமையில் ஆய்வாளர்கள் சங்கீதா, சிங்காரவேலன், செல்வமலர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆறுமுகம், பிரேம்குமார், கனகராஜ், பழனிசாமி, ஆனந்தன், சுரேஷ்குமார் உட்பட 23 பேர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது, லட்சுமி சிலைக் கடத்தல் வழக்கில் கைதான சக்திவேல் என்பவரும், தீனதயாளன் என்பவரும் டிஜிபி ராஜேந்திரனைச் சந்தித்து பொன்மாணிக்கவேலுக்கு எதிராகப் புகார் கொடுத்தனர்.

சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை

இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஏடிஎஸ்பி இளங்கோ, போரூர் அருகே லட்சுமி சிலை கடத்தப்பட்டதாகக் கைது நடவடிக்கை மேற்கொண்டபோது அந்தச் சிலை வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது என்று தெரியவந்ததாகக் கூறினார். சட்டத்துப் புறம்பாகச் செயல்படவும், பொய்யான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களை வற்புறுத்துவதாகப் பொன்மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினார்.

“பந்தநல்லூர் கோயில் தொடர்பான வழக்கை விசாரிக்கத்தான் ஐஜி பொன்மாணிக்கவேலை நியமித்தது உயர் நீதிமன்றம். ஆனால், அவர் அந்த வழக்கை விசாரணை செய்யவில்லை. இன்று பரபரப்பாக பேசக்கூடிய பழனி கோயில், காஞ்சிபுரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட முக்கிய வழக்குகள் குறித்து பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்குகளில் அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள் எல்லாம் சிக்குவார்கள் என்று தெரிந்து அவர் விசாரணை நடத்தவில்லை.

எங்களுக்கு ஐஜியாக இருக்கும்போது அவர் மிரட்டி வந்தார். அதனால் அந்த வழக்குகளில் கைது செய்தோம். நீதிமன்ற விசாரணையின்போது, கைது செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். மறுபடியும் இந்த வழக்குகளில் நாங்கள் விசாரணை நடத்தினால், தவறாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் விசாரணை அதிகாரி என்ற முறையில் எங்களுக்கு தான் பிரச்சினை வரும்” என்று பேட்டியளித்தார் இளங்கோ.

பொன்மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன். அதே நேரத்தில், பொன்மாணிக்கவேலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போலீசாரின் பின்னணியில் இருப்பது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக பொதுச்செயலர் ஹெச்.ராஜா.

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

செவ்வாய் 25 டிச 2018