மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் - 1

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் - 1

ஆரா

இன்று அதிமுகவின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினம். இந்த தினத்தில் அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பிப்பது பொருத்தமானதாகத்தான் இருக்கிறது.

திமுகவில் பொருளாளராகவும் பரங்கிமலை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்படுகிற சூழலில், அவரது அரசியல் பிஏவாக இருந்த அனகபுத்தூர் ராமலிங்கத்திடம் சொல்லி அண்ணாதிமுக என்றஒரு பெயரைப் பதிவு செய்யச் சொல்கிறார். அவரும் பதிவு செய்கிறார். எஸ்டிஎஸ் உள்ளிட்ட எம்ஜிஆர் ஆதரவுத் தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

முடிவில், ‘ஒரு தொண்டன் ஆரம்பித்த கட்சியில் என்னை நான் இணைத்துக் கொள்கிறேன்’ என்று அதிமுகவில் இணைந்து அதன் பொதுச் செயலாளர் ஆனார். ஆக அதிமுக என்பது தலைவர்களால் திட்டமிட்டு தொண்டரால் உருவாக்கப்பட்ட கட்சி. அதனால்தான் அக்கட்சிக்கு ’தொண்டர்கள் முகம்’ வலிமையாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் காலத்தில் கட்டிக் காக்கப்பட்ட அந்த கோட்டை அவரது மறைவுக்குப் பின் என்னாயிற்று என்பதை செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

2017 செப்டம்பர் 21 ஆம் தேதி தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவால் முதல்வராக அமர்த்தப்பட்டு தினகரனை தள்ளிவைத்து ஆட்சி யுத்தம் நடத்தும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக சேர்ந்தனர்.

அணிகள் இணைந்ததும் ஓ.பன்னீருக்கு துணை முதல்வர், அவரோடு சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களில் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி அளித்து தன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த இருவரது கையையும் அப்போதைய ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஏதோ திருமணம் நடத்தி வைக்கும் தாய்மாமன் போல கைகளை சேர்த்துப் பிடித்து இணைத்து வந்த காட்சியை தமிழகம் இன்றைக்கும் மறந்திருக்காது.

அணிகள் இணைந்தன என்ற செய்தியைத் தவிர மற்ற எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று ஓ.பன்னீரையும், எடப்பாடியையும் வர்ணித்து அதிமுகவில் சில பிழைப்புவாதக் குரல்கள் ஒலிபெருக்கின. மிகச் சமீபத்திய தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூட,’எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

இன்று மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கூட, ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கைகள் குவித்து கண்கள் நனைத்து, ‘புரட்சித் தலைவரின் மக்கள் இயக்கத்தின் மாண்பைக் காத்திடுவோம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி இரு பெரும் தலைவர்களின் மகத்தான இயக்கத்தையும், அரசையும் காப்போம் காப்போம் என்று உறுதி ஏற்கிறோம்” என்று உறுதிமொழியை ஓ.பன்னீர் வாசிக்க, எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் மீண்டும் வாசித்து உறுதி ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் தலைமைக் கழகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் நிகழ்வுகளும்,நகர்வுகளும் வேறு மாதிரியே இருக்கின்றன. இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அல்லர், ஆளுக்கு ஒரு துப்பாக்கி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகின்றன.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது இருக்கிறார்கள். ’நம்மில் யார் அடுத்த ஜெயலலிதா?’ என்ற போட்டிதான் தற்போது அவர்களுக்கு இடையே நடந்து வருகிறது. அதனை ஒட்டிதான் பல திரைமறைவு காய் நகர்த்தல்களும் நடந்து வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கிய அறிவிப்பில் ஓ.பன்னீரின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்ததே இன்று கட்சியில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி. அந்த ஓர் அறிவிப்புக்குள் சென்று பார்த்தாலே எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையே நடக்கும் அறிவிக்கப்படாத போர் புதைந்திருக்கிறது.

தேனிக்கும் தலைமைச் செயலகத்துக்கும், சேலத்துக்கும் தலைமைச் செயலகத்துக்கும் இடையே என்ன நடக்கிறது என விசாரித்து அறிந்த உண்மைகளோடு அதிமுகவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற தொடரை எம்.ஜிஆரின் நினைவு நாளிலிருந்து தொடங்குவோம்.

(தொடர்ந்து பயணிப்போம்...)

திங்கள், 24 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon