மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

சபரிமலை: போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்ட 2 பெண்கள்!

சபரிமலை: போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்ட 2 பெண்கள்!

இன்று காலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்குச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள், அப்பச்சிமேடு எனும் இடத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு எதிரான போராட்டம் வலுக்கவே, போலீசார் அவர்களைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த பிந்து ஆகிய இருவரும், இன்று (டிசம்பர் 24) அதிகாலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த தகவலை, அவர்கள் இருவரும் கேரள காவல் துறையினருக்குத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சபரிமலைக்கு 2 கி.மீ. முன்னதாக அப்பச்சிமேடு எனும் இடத்தில் அவர்களை ஐயப்ப பக்தர்கள் சூழ்ந்தனர். அவர்களது பயணத்தைத் தடுக்கும் வகையில் போராட்டம் மேற்கொண்டனர்.

பக்தர்களின் சரண கோஷம் உச்சத்தை எட்ட, அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது. இதையடுத்து, அந்த இடத்துக்கு வந்த போலீசார் பிந்துவுக்கும் கனகதுர்காவுக்கும் பாதுகாப்பு அளித்தனர். அவர்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். ஆனால், வழியெங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவர்களைத் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர் போலீசார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டனர். ஆனால், பிந்துவும் கனகதுர்காவும் திரும்பிச் செல்ல மறுத்தனர்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நேரக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் கேரள போலீசார். முடிவில், அவர்கள் இருவரும் பம்பைக்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது, அந்த பெண்கள் மயக்கமடைந்ததாகவும், அவர்களுக்கு போலீசார் உணவும் தண்ணீரும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர்களை ரகசிய இடத்தில் போலீசார் தங்க வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிந்து, கனகதுர்கா இருவரும் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், மார்க்சிஸ்ட் அரசு அவர்களுக்கு உதவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை. இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் கேரள மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்.

சபரிமலை போராட்டம் ஒருபுறமிருக்க, பிந்துவின் சொந்த ஊரான பெரிந்தலமன்னா பகுதியிலுள்ள அவரது வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திங்கள், 24 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon