மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகருக்குக் காவல் நீட்டிப்பு!

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகருக்குக் காவல் நீட்டிப்பு!

விவிஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை, ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1999ஆம் ஆண்டு இந்திய விமானப்படையினால் விவிஐபிகளுக்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான திட்டம் வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இது தொடர்பான ஒப்பந்தம் இத்தாலி நாட்டிலுள்ள பின்மெக்கானிகா குழுமத்தைச் சார்ந்து இங்கிலாந்தில் செயல்பட்டுவந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு 3,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்பட்டது. 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் 423 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை துபாயில் இருந்து நாடு கடத்தி வந்து சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர்.

மேலும், கிறிஸ்டியன் மைக்கேலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான பொருளாதார அமலாக்கத் துறை அதிகாரிகள் கிறிஸ்டியன் மைக்கேல் தொடர்பான வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் 15 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் கிறிஸ்டியன் மைக்கேலை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிறு, 23 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon