மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

பணம், பதவி, புகழ்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

பணம், பதவி, புகழ்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

கனவு மெய்ப்பட – 7

பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் மூன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேரக் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அது அபூர்வம்.

மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பதவி வரும்போது பணமும் கூடவே வரும். அதனுடன் இணைப்பாய் புகழும் வரும். அதுபோலவே பணமும் பதவியும் நம்மை விட்டுச் செல்லும்போது அதனால் உண்டான புகழும் நம்மை விட்டுச் சென்றுவிடும்.

நம்மிடம் பணமும் பதவியும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கல்வியினாலும் திறமையினாலும் அது சார்ந்த உழைப்பினாலும் கிடைக்கப்பெற்ற புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

பணத்தினாலும் பதவியினாலும் திறமையை விலைக்கு வாங்கவே முடியாது, கல்வி அறிவையும் பெற முடியாது. திறமை என்பது நம் ஆக்க சக்தி. கல்வி என்பது நம் அறிவு சக்தி. இரண்டும் நமக்குள் இருந்து தானாக ஊற்றெடுக்க வேண்டும்.

ஒருமுறை மல்டிலெவல் மார்கெட்டிங் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றைத் தயார் செய்வதற்காக அதன் மீட்டிங்குக்குச் சென்றிருந்தேன். குடும்பத்துடன் வரச்சொல்லி அறிவுறுத்தியதால் என்னுடன் என் பெற்றோரும் வந்தனர். மீட்டிங் முடிந்ததும் அவர்களுக்கே உள்ள பாணியில் என்னையும் அதில் ஈடுபடுத்திக்கொள்ளச் சொல்லி கேன்வாஸ் என்ற பெயரில் வற்புறுத்தினார்கள்.

அவர்களுக்கும் எனக்குமான உரையாடல்…

‘மேடம் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை செய்கிறீர்கள்?’

‘சொந்த பிசினஸாக இருப்பதால் யோசித்தல், செயல்பாடு எனத் தூங்கும் நேரம்கூட அதே சிந்தனைதான்…’

‘நீங்கள் இந்த மல்டிலெவல் பிசினஸில் சேர்ந்துவிட்டால் தூங்கும் நேரத்தில்கூட யோசிக்க வேண்டாம். சம்பாதிக்கலாம்… ஒரு நாளைக்கு 4-5 மணிநேரம் உழைத்தால் போதும்… 2-3 வருடங்களில் கோடிகளில் சம்பாதிக்கலாம்…’

உடனே என்னுடன் வந்திருந்த என் அப்பா அம்மா ஒரு சேரச் சொன்னார்கள்…

‘என் பெண்ணுடைய புத்தகங்களும், அனிமேஷன் சிடிக்களும், சாஃப்ட்வேர்களும் பல பல்கலைக்கழகங்களில் பாட திட்டமாக உள்ளன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் டீன்கள், முதல்வர்கள் உட்பட இவளுடைய திறமைக்கும், படிப்புக்கும் மதிப்புக் கொடுத்து மரியாதையாக நடத்துகிறார்கள்… பல கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை உரை நிகழ்த்த அழைக்கிறார்கள்… இவை அத்தனையும் இவளுடைய கல்வியினாலும், திறமையினாலும் மட்டுமே…

இதெல்லாம் உங்கள் பணத்தினால் கிடைக்குமா அல்லது நீங்கள் சொல்லுகின்ற அந்த மல்டிலெவல் பிசினஸினால்தான் கிடைக்குமா…’

இந்தப் பதிலுக்குப் பிறகு அவர்கள் வாயைத் திறக்கவே இல்லை.

முன்பெல்லாம் நடுத்தரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாகப் பணம் இருந்துவந்தது. இன்று தொழில்நுட்பப் புரட்சியின் உச்சத்தில் பல நடுத்தரக் குடும்பங்களில் அதீதமாகக் கிடைக்கின்ற வருமானமே பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிட்டது.

ஒரு சிறந்த மனிதர் மிக உயர்ந்த நல்ல பதவியில் இருந்துகொண்டு, அந்த பதவியைப் பயன்படுத்திப் பிறருக்குப் பயன்படும் விதத்தில் நல்ல செயல்களைச் செய்யாமல் இருப்பது தீய செயல்களைச் செய்து பிறரைத் துன்புறுத்துபவர்களைவிட மோசமானது.

பணம், பதவி இவற்றை வைத்துக்கொண்டு இன்று பலரும் போலிப் புகழைச் சம்பாதித்துவிடுகிறார்கள். நிஜமான புகழ்தான் வெற்றிக்கு அடித்தளம். செயற்கையான புகழ் நிலைக்காது.

மாவீரன் அலெக்ஸாண்டர் தான் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து தன்னுடைய மூன்று ஆசைகளைக் கூறுகிறார்.

- என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்.

- என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியை நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்.

- என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்.

இவற்றுக்கான காரணத்தையும் விளக்கினார்.

முதல் ஆசைப்படி, என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வது, மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஓர் உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது, மரணத்தை அவர்களால் நிறுத்தவும் முடியாது என்பதை உணர்த்த.

இரண்டாவது ஆசைப்படி, வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான் என்பதைத் தெரியப்படுத்த.

மூன்றாவது ஆசைப்படி, உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்துகொள்ள.

அப்துல் கலாம் சொல்லும் பணம், புகழ், பதவி!

2003இல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை எழுத்தாளர் சிவசங்கரி கல்கி வார இதழுக்காகப் பிரத்யேகமாக எடுத்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.

பணம், புகழ், பதவி – இவை மூன்றும் போதை தரக்கூடியவை. இந்த மூன்றையும் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதுதான் கேள்வி.

முதலில் பணம் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்கிறேன். இதற்கு நான் என் இள வயதுக்குப் போக வேண்டும். என் பெற்றோரிடம் பணம் இருந்ததில்லை. இருந்தாலும் வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் சாப்பாடு போட்டுக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்குப் பணம் வேண்டும் என்பதே இல்லை. நான் சிறுவனாய் இருந்தபோது காலையில் 4 மணிக்கு எழுந்து அப்பாவுடன் தொழுதுவிட்டு மதரஸா பள்ளியில் குரான் படித்து, ரயில்வே ஸ்டேஷனில் பேப்பர் கட்டுக்களை எடுத்து விநியோகம் செய்து, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, உடை மாற்றி பள்ளிக்குச் சென்று, மாலையில் திரும்பி, பணம் வசூலிக்கச் சென்று, வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, சாப்பிட்டுப் படுப்பேன். மூச்சு விட நேரமிருக்காது. என்றாலும் சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது.

பணம், நல்ல பணமாய் நேர் வழியில் வந்ததாக இருந்தால் வாழ்க்கை அமைதியாய் இருக்கும்.

அடுத்தது புகழ்.

இதை நான் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். முதன்முதலில் ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் நான் தோல்வியடைந்தபோது, எனக்கு மேலதிகாரியாக இருந்த சதீஷ் தவன் என்ற அருமையான மனிதர், அந்தத் தோல்விக்குத் தன்னைப் பொறுப்பாக்கிக்கொண்டார். ஆனால், அடுத்த முறை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியபோது அந்த வெற்றிக்கு என்னைக் காரணமாக்கினார். இது எப்பேர்ப்பட்ட உயர்ந்த காரியம்! தோல்வியைத் தான் எடுத்துக்கொண்டு, வெற்றியை எனக்குக் கொடுத்த அந்த உயர்ந்த செய்கை, இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதன் பிறகு ஏதாவது காரியத்திற்காக புகழ் வந்தால், உடனே நான் சதீஷ் தவனை நினைத்துக்கொள்வேன்.

அடுத்தது, பதவி.

அது வரும், போகும். நாம் ஏன் அதற்காகக் கவலைப்பட வேண்டும்?

என்ன ஓர் அருமையான பதில். பணம், புகழ், பதவி குறித்து இதைவிட சிறந்த பதில் வேறொன்றிருக்க முடியுமா? Hats Off to DR. APJ Abdul Kalam.

திறமையும் உழைப்பும் கொடுத்த அங்கீகாரம்

1992இல் ஆரம்பித்த எனது நிறுவனம் (காம்கேர்), 1998இல் இரண்டாம் கியருக்கு மாறிக்கொண்டிருந்த அற்புதத் தருணம். அலுவலக மீட்டிங்கில் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட் (ஆண்) கேட்ட கேள்வியும், ஒரு புரோகிராமர் (பெண்) கேட்ட கேள்வியும் இரு வேறு துருவங்கள்.

ஆர்டிஸ்ட் கேட்ட கேள்வி… ‘மேடம் நீங்கள் இவ்வளவு திறமைசாலியா இருக்கீங்க… ஆனாலும் அந்த அளவுக்குப் புகழ் கிடைக்கவில்லையோ என்பது என் வருத்தம்…’

புரோகிராமர் கேட்ட கேள்வி… ‘மேடம் உங்கள் வாழ்க்கையையே கம்ப்யூட்டர் துறைக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள்… ஆனாலும் மற்றவர்களைப் போல பணம் சம்பாதிக்கவில்லையோ என்பது என் வருத்தம்…’

ஒரே விஷயம் குறித்து ஓர் ஆணின் பார்வையும், ஒரு பெண்ணின் கோணமும் வித்தியாசப்படுவதைப் பாருங்கள்.

இவர்கள் என்னிடம் பணிபுரிந்த காலகட்டத்தில் அனைத்துப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் என் நேர்காணல் வந்துகொண்டுதான் இருந்தன… இன்னும் சொல்லப் போனால் மீடியாக்கள் அனைத்தும் என் திறமையைக் கொண்டாடின எனலாம். அதுபோல நான் உழைப்பதற்கு ஏற்ப பணமும் வந்துகொண்டுதான் இருந்தது.

ஆனாலும் அவர்கள் மனதில் ஏற்பட்ட சந்தேகத்துக்கான பதிலை இருவருக்கும் பொதுவாகச் சொன்னேன்.

‘கயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனைப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அவள் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும்தான் இருக்க வேண்டும். அதை விட்டு, அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை ஒரு நொடி பார்த்துவிட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலைக் காது கொடுத்து கேட்டுப் பூரிப்படைந்துவிட்டாலோ என்ன ஆகும்?

அது போலத்தான் நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுபவர்களைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இதுதான் என் வெற்றியின் ரகசியம்.

நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளும் பணியும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்போது அதை மற்றவர்களுடன் நாம் ஒப்பிடவே முடியாது…

நமக்கான குறிக்கோள் எப்படி தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறதோ அப்படியே நமக்கான கட்டுப்பாடுகளும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்… அப்படி இருக்கும்போது நமக்குக் கிடைக்கும் புகழும், பணமும் அதற்கேற்பவே இருக்கும்…

நேர்மையான முறையில் நாம் பயணிக்கும்போது கிடைக்கின்ற பலனை எதனோடும் ஒப்பிட முடியாது…’

இந்த உரையாடல் நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகின்றன. சென்ற வருடம் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லியைக் கொண்டாடினோம். ‘காம்கேர்’ என்ற என் நிறுவனத்தின் பெயரே என் அடையாளமாகியுள்ளது.

இத்தனையும் என் திறமைக்கும் அது சார்ந்த உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம்.

யோசிப்போம்!

(அடுத்த கட்டுரை அடுத்த வெள்ளியன்று)

(கட்டுரையாளர் காம்கேர் கே. புவனேஸ்வரி காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐ.டி. நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர்,தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MDஆகக் கடந்த 25ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும்பல பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

வெள்ளி, 21 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon