மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 டிச 2018

பெண்களை நோக்கித் தொடுக்கப்படும் கேள்விகள் – பெருந்தேவி

பெண்களை நோக்கித் தொடுக்கப்படும் கேள்விகள் – பெருந்தேவி

பாலியல் ஒடுக்குதலும் பாலியல் விசாரணைகளும்

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் பற்றி ஜெயமோகன் நல்ல கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதை வெகுவாகச் சுட்டி, எதிர்வினையாக என் வாசிப்பை வைப்பதற்குக் காரணம், ஜெயமோகன் அக்கினிப் பிரவேசத்தையும் சரி, அதன் தொடர்ச்சியான சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்தையும் சரி, இந்திய / தமிழ்ச் சமூக வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசுகிறார் என்பதுதான். அக்கினிப் பிரவேசத்தின் முக்கியத்துவத்தை, ஒரே சமயத்தில் முற்போக்காளர்களும் மரபுவாதிகளும் தங்களுக்கான பிரதியாக வாசித்ததைக் குறிப்பிட்டு விவரிக்கிறார் ஜெயமோகன். என் வாசிப்பில், அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதைப் பிரதியின் தனித்துவம், அது வல்லுறவு நிகழ்விலிருந்து பாலியலை அப்புறப்படுத்தியதில் இருக்கிறது. இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலைப் பற்றி எழுதும் ஜெயமோகன், “இது பெண்ணின் தனித்தன்மை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் உரிமை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் தேடல் பற்றிய நாவலும்கூட. அவ்வகையில் தமிழில் எல்லாத் தளத்திலும் முதன்மையான பெரும் படைப்புகளில் ஒன்று” எனச் சிலாகிக்கிறார். நாவலின் முடிவில் கங்காவின் “சிதைவை” வீழ்ச்சியாக அவர் பார்க்கிறார்.

அவர் பார்வைக் கோணத்திலிருந்து விலகியும் எதிர்நிலையிலும் நான் இந்த நாவலை வாசிக்கிறேன். என் வாதம் இதுதான்: இந்த நாவல் பெண்ணின் தனித்தன்மையைப் பற்றியதோ, பாலியல் உரிமை அல்லது தேடல் பற்றியதோ அல்ல. இது பாலியல் சொல்லாடல்களைப் பெருக்கும், ஒழுங்குபடுத்தும் நம் சமூகத்தின் செயல்பாடுகளை முதன்மைப்படுத்துகிற நாவல். அதனாலேயே, அக்கினிப் பிரவேசம் சிறுகதையின் காரணமாக (என்போன்ற) வாசகர் மனதில் ஓர் உயரிய இடத்துக்குச் செல்லும் ஜெயகாந்தன் எனும் எழுத்துரு பிம்பம், சற்றுக் குலைந்தும் போகிறது.

நாவலுக்கான தன் முன்னுரையில் ஜெயகாந்தன் அக்கினிப் பிரவேசம் சிறுகதையிலிருந்து வேறுபட்ட “இன்னொரு மாதிரியான ஆட்டம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்த்தோம். இந்த ஆட்டத்தின் ஒரு சிறப்பம்சம் புதினத்தில் கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் உள்ளது, அல்லது சிறுகதையில் பெயர்கள் இல்லாமல் இருப்பதில் உள்ளது. தமிழ் அக இலக்கிய மரபில், களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகியவற்றைப் பேசும் பாடல்களில் தலைவன், தலைவிக்குப் பெயர்கள் இல்லை. இந்த மரபை ஒரு வகையில் ஒட்டியும் ஒரு வகையில் விலகியும், சிறுகதையில், வல்லுறவில் ஈடுபடும் அவனுக்கோ, பாதிக்கப்படும் அவளுக்கோ பெயர்களைத் தருவதில்லை ஜெயகாந்தன். இதை எப்படி அர்த்தப்படுத்தலாம்? கூடல், காத்திருத்தல், ஊடல், ஆற்றாமை, பிரிவு... இந்த ஐந்தாக இல்லாமல், கைக்கிளை, பெருந்திணை ஆகியவையாகவும் இல்லாமல், புது அகத்திணையை உருவாக்கியிருக்கிறார் ஜெயகாந்தன் எனலாமோ?

இந்த புது அகத்திணைக்கு “வல்லுறவு” என்று பெயரிடலாம் எனத் தோன்றுகிறது. ஜெயகாந்தனுக்கோ, நவீன இலக்கியப் புலத்துக்கோ முன்னால் வரலாற்றில் வல்லுறவே இல்லை என்பதல்ல நான் சொல்வது. வல்லுறவு என்ற சொல், அது ஏற்படுத்தக்கூடிய உணர்வு, இவை தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய திணையை வடிவமைக்க வாய்ப்புண்டு. மேலும், சமீப பத்தாண்டுகள் வரை, கற்பழிப்பு என்ற சொல்தான் புழக்கத்தில் இருந்தது என்பதையும் இத்தோடு இணைத்து நாம் யோசிக்கலாம்.

சிறுகதையைப் போலன்றி, நாவலில் கதாபாத்திரங்களின் பெயர்கள் தரப்படுவது, குறிப்பிட்ட சில மனிதர்களின் கதையாக நாவலை வரைமுறை செய்கிற முயற்சியாக இருக்கிறது. அந்தக் கதை, பாலியலுக்கு முழுக் கவனத்தைத் தந்து, சமூக ஒழுங்குமுறைக்கு அதை உட்படுத்துவதாகவும் இருக்கிறது. பாலியலுக்குக் கவனம் தரும் நாவலின் கதையாடல், கங்கா என்று இப்போது அடையாளம் காட்டப்படுகிற அந்தப் பெயரில்லாத பெண் எதிர்கொண்ட வல்லுறவையே சுற்றிச் சுற்றிப் பின்னப்படுகிறது.

பாலியல் – பெண் பாலியல்

இங்கே நான் பயன்படுத்தும் சில கருத்தாக்கங்களைத் தெளிவுபடுத்துவது நல்லது. “பாலியல்” என்றுதான் சொல்கிறேன். “பெண் பாலியல்” என்று ஏற்கெனவே தரப்பட்ட ஒன்றாக நான் கூறவில்லை. ஏனெனில், பாலியல்களை ஒரு சமூகம் குறிப்பிட்ட நியதிகளின் அடிப்படையிலான செயற்பாடுகளால் ஒழுங்குபடுத்தியே ஆண், பெண் என்ற பால்களைத் தொடர்ந்து, இடையறாது கட்டமைக்கிறது என்பது இந்தக் கட்டுரையின் அடிப்படைப் புரிதல். ஏற்கெனவே முந்தைய கட்டுரைகளில் இதை எழுதியிருந்தாலும், நினைவூட்ட மீண்டும் இதை எழுதுகிறேன். இத்தகைய சமூகச் செயற்பாடுகள், பால்களைக் கட்டமைக்கும்போதே, அவற்றுக்கு இடையிலான படிநிலையையும் கூடவே உருவாக்குகின்றன.

மேலும், கவனிக்க வேண்டியது, பாலியல்களை ஒழுங்குபடுத்தலின் முக்கியக் கரிசனையாக இனப்பெருக்கம் (sexual reproduction) இருக்கிறது. அதாவது இனப்பெருக்கத்துக்கு அப்பாலான, அதைத் தாண்டிய பாலியல் இச்சைகள், சமூகச் சூழலில் அங்கீகரிக்கப்படாத நிலையில், அந்த நிலையை அப்படியே பிரதிநிதித்துவம் (represent) செய்வதாக இந்த நாவல் இருக்கிறது. ஆனால், இந்தப் பிரதிநிதித்துவச் சொல்லாடல் எந்த அளவுக்குக் கருத்தியல் வல்லமை பெற்றிருக்கிறது என்றால், ஒரு பெண்ணின் “இயல்பான” பாலியல் தேடல் இது, விருப்பம் இது என்று வாசிப்பவர்களையும் நினைக்க வைத்துவிடுகிறது. சமூகத்தில், பாலியல் தளத்தில் பெரும் மேலாண்மை பெற்றிருக்கும் இனப்பெருக்கக் கருத்தியலின் வெற்றியே இப்படி நம்மை நம்பச் செய்துவிடுவதுதான்.

மேலும், சிறுகதை நடக்கிற நவீன காலகட்டம், ஜெயமோகன் குறிப்பிடுவதைப் போல, பெண்கள் கல்விக்கு, வேலைக்கு என வெளியே வரத் தொடங்கிய காலகட்டம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியாது என்ற தரப்பினர், கற்பு உடலை அல்ல, மனதைப் பொறுத்தது என்று வாதிட்ட முற்போக்குத் தரப்பினர், இரு தரப்பினருமே இந்த நாவலைச் சுட்டிப் பேசினார்கள் எனச் சொல்கிறார். இத்தகைய புரிதல்களைத் தாண்டி, நாவலைப் பெண் பாலியல் உரிமை, தேடல் ஆகியவற்றின் அடிப்படையில் நாவலை வாசிக்கப் பரிந்துரைக்கிறார்.

இங்கே, நாம் யோசிக்க வேண்டிய ஓர் அடிப்படையான விஷயம்: பெண்கள் வேலைக்கு, கல்விக்கு என்று வெளியே வரத் தொடங்கிய காலகட்டத்தில் ஏன் பாலியல் இந்த அளவுக்கு ஜெயகாந்தனின் நாவலில் கவனம் பெற்றது, பொதுவெளியில் விவாதத்துக்கு உரியதாக எவ்வாறு முதல் வரிசைக்கு நகர்ந்து வந்தது என்பதைத்தான். வழக்கமாக, அறிவுச் சமூகத்தினர் இவ்வாறு நினைக்கப் பழகியிருக்கிறோம்: “நவீன காலகட்டத்தில், பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வரத் தொடங்கிய பின்னர்தான், அவர்களுக்கு அதுவரை கிட்டாத, அல்லது அடக்கிவைக்கப்பட்டிருந்த, பாலியல் தேடல், உரிமை போன்றவற்றுக்கான வாய்ப்பு, இடம் கிடைத்தது, அதனால் மரபார்ந்த ஒழுக்கவாதிகள் பெண்கள் வெளியே வருவதை எதிர்த்தார்கள்” என்பதான புரிதல்.

இதையெல்லாம் எந்த அளவுக்கு வரலாற்றுத் தரவுகளோடு ஆராய்ந்திருக்கிறோம் என்பது ஒரு புறம். இன்னொரு புறம். இத்தகைய புரிதல் ஒரு தளத்தில், ‘மேற்கில்’ ஒரு பொருண்மையான கருத்தாக்கமாக எழும்பிய, இன்றுவரையிலும் வலுப்பெற்றிருக்கும் அடக்குமுறைக் கருதுகோள் (repressive hypothesis) என்ற கருத்தாக்கத்தோடு, வாதத்தோடு ஒப்பிடத்தக்கது. சுருக்கமாகச் சொன்னால், பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி, பூர்ஷ்வா வாழ்க்கை முறை, உற்பத்தி உறவுகள், தேவை மற்றும் மதிப்பீடுகளால் நிலைபெற்ற அதிகாரத்தின் காரணமாக, மனிதர்களின் ‘இயற்கையான’, பல திசைகளிலும் செல்லக்கூடிய பாலியல் இச்சைகள் அடக்கிவைக்கப்பட்டன என்ற வாதம். இந்தக் கருத்தாக்கத்தை, வாதத்தைத்தான் பூக்கோ முதலானவர்கள் பிரச்சினைக்கு உட்படுத்துகிறார்கள், எளிமையான புரிதல் என்று விமர்சிக்கிறார்கள். பாலியல் ‘விடுதலை’ என்பது எப்படி புரட்சிகரமான பரிமாணத்தோடு இயைந்து பொதுவெளிப் பேச்சில் வந்தது என்று கேட்கிறார்கள். அதிகாரம் என்பதற்கு எதிராக எவ்வாறு இத்தகைய விடுதலை கட்டமைக்கப்பட்டது என்று ஆராய்கிறார்கள்.

ஏனெனில், சமீப நூற்றாண்டுகளில், பாலியல் என்பது ஒடுக்கப்பட்டது என்பதைவிட, அதைச் சார்ந்த சொல்லாடல்கள் அதிகரித்தன, பெருக்கப்பட்டன என்பதுதான் பூக்கோ வைக்கிற முடிபு. நவீன காலம் என்று சொல்கிற காலகட்டம் உளப்பகுப்பாய்வு மருத்துவ மற்றும் சட்ட, நீதி நிர்வாகச் சொல்லாடல்களில், பாலியல்கள் பெருவாரியாகப் பேச்சு வெளிக்கு வந்த காலகட்டம். தவிர, குடும்பத்துக்குள்ளேயும், குழந்தைகளின் பாலியல்கள் போன்றவை சொல்லாடல் பெருக்கத்துக்கு, அதன் மூலம் கண்காணிப்புக்குள் வந்தன. எனவே, அதிகாரம் பாலியலை ஒடுக்கியது, அது சார்ந்த வெளிப்பாட்டைத் தடுத்தது என்பதெல்லாம் குறைவுபட்ட புரிதல் என்பதுதான் பூக்கோவின் அடிப்படையான விமர்சனம்.

பாலியல் விசாரணை

நான் ஏதோ மேற்கத்தியக் கோட்பாட்டு அளவுகோல்களைத் தமிழ் நாவலுக்குப் பக்கத்தில் வைத்து அளக்கிறேன் என்று கொள்ள வேண்டியதில்லை. நாவலில் இருக்கும் உள் தரவுகளை வைத்தே என் கருத்துகளை முன்வைக்கிறேன். முதல் உதாரணமாக, ஜெயகாந்தனின் நாவலில் கங்காவின் வெங்கு மாமா கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். “அனைத்து வகையான பாலியல் மீறல்களையும் அனுமதித்துக்கொண்டு மேலே ஓர் ஆசாரவாதத்தைப் போர்த்திக்கொண்டு இருக்கும் மரபின் முகமாக” அவரைப் பார்க்கிறார் ஜெயமோகன். ஆனால், அந்த மாமா கதாபாத்திரம், பாலியலைப் பற்றித் தொடர்ந்து கேள்வி கேட்கிற கதாபாத்திரம் என்பது கவனிக்கத்தக்கது. அந்தக் கதாபாத்திரம் கங்காவின் பாலியல் பற்றி தொடர்ந்து விசாரித்து, கேட்டுத் தெரிந்துகொள்கிறது. கங்காவின் பாலியல் பற்றிய “உண்மையை” அறிய முனைகிறது. வெங்கு மாமாவுக்கும் கங்காவுக்கும் நடக்கிற உரையாடல் நீதிமன்ற விசாரணையை ஒத்ததாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு மருத்துவம் ஒரு மனதைப் பற்றித் தெரிந்துகொள்ள அதை ஒப்புக்கொடுக்கக் கோருவதைப் போல அது கோருகிறது. “வக்கிரம்” என்று நமக்குத் தெரிந்த லேபிளுக்குப் பின்னால் இங்கே நடப்பது பாலியல் குறித்த விலாவாரியான விசாரணை. எடுத்துக்காட்டாக இந்தப் பகுதி:

“அவன் உன்னைக் கூப்பிட்ட உடனே நீ ‘சரி’ன்னு கார்லே ஏறிண்டாயாக்கும்?”

“ம் ஹ்ம்… மொதல்ல மாட்டேன்னுதான் சொன்னேன்.”

“மனப்பூர்வமா சொன்னியா? சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னயா?”

“எனக்குப் பயமா இருந்தது. அதனால்தான் மாட்டேன்னு சொன்னேன்.”

“அப்புறம் எப்படி உனக்கு அந்தப் பயம் தெளிஞ்சது?”

“பயத்தோடதான் ஏறிண்டேன்.”

“உனக்கும் அவனைப் பிடிச்சிருந்ததா?”

“அப்படியெல்லாம் இல்லை.”

“பின்னே எதுக்குப் பயந்துண்டே ஏறிண்டே?”

“மழை பெஞ்சுண்டு இருந்தது.”

“நல்ல மழையா? தொப்பமா நனைஞ்சுட்டியா? … யாரையாவது இறுக்கி அணைச்சிண்டாத் தேவலாம் போல இருந்ததா?”

இந்த நாவல் பிரசுரமான பின் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து வெளிவந்த ’நியாயம் காவாலி’ (பின்னர், இது தமிழில் விதி என்ற பெயரில் எடுக்கப்பட்டது) தெலுங்குத் திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சி, இதை வாசிக்கும்போது நினைவில் வரலாம். பொதுவாக, பாலியல் வல்லுறவு வழக்குகளில், புகார் கொடுக்கும் பெண்களை நோக்கி நீதிமன்ற விசாரணைகள் நடைபெறும் விதம் இது.

தந்தை இல்லாத குடும்பத்தில், தந்தையின் இடத்தில் ஒரு patriarch ஆக இருக்கும் வெங்கு மாமாவின் மூலமாக, குடும்பம் என்ற நிறுவனத்தின் அதிகாரம் தொழில்படுகிறது. குடும்ப நிறுவனத்துக்கு இணையான நீதிமன்றம், உளமருத்துவ கிளினிக் போன்ற நிறுவனங்களோடு, ஒரே வகையிலான, பாலியல் குறித்த விசாரணைச் சொல்லாடல்களை அது பகிர்ந்துகொள்கிறது. இந்த நிறுவனங்களால் இத்தகைய சொல்லாடல்கள் பெருகுகின்றன. நிறுவனங்கள் பாலியல் தேர்வுகளை, இச்சைகளை, இடையறாது பகிர்ந்துகொள்ளக் கோருகின்றன. எனவே, குடும்பம் மற்றும் அதற்கிணையான இதர நிறுவனங்கள் பாலியலை ஒடுக்குவதைச் செய்கின்றன என்ற ஒற்றைப் பரிமாணப் புரிதலை நாம் கைவிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

சமூக, அரசாங்க நிறுவனங்களின் அதிகாரம், சமூக உறுப்பினர்களின் பாலியல் பற்றிய “உண்மையை” அறிந்துகொள்ளுதல், அது குறித்த அறிவைச் சேகரித்தல் போன்றவற்றோடு பிணைந்திருக்கிறது. நவீனத்தில் அதிகாரம் என்பது இயங்கும் வகையும்கூட இது.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 10 டிச 2018