மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

டிஜிட்டல் திண்ணை: இன்னொரு தூத்துக்குடியா? டெல்டா விசிட்டை ரத்து செய்த ரஜினி!

டிஜிட்டல் திண்ணை: இன்னொரு தூத்துக்குடியா? டெல்டா விசிட்டை ரத்து செய்த ரஜினி!

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் லொக்கேஷன் திருச்சியைக் காட்டியது. வாட்ஸ் அப் வந்தது.

“கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும், தனிநபர்களும் வந்து மக்களுக்கு பல்வேறுபட்ட நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார்கள் . 93 வயதாகும் மூத்த தோழர் நல்ல கண்ணு முதல் பல இளம் தலைவர்கள் வரை டெல்டாவுக்கு வந்து மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயரத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு உடனடியான நிவாரண உதவிகளையும் வழங்கினார்கள்.

ஆனால் இன்றுவரை ரஜினிகாந்த் டெல்டா பக்கம் வரவில்லை. அவர் வரவில்லையே தவிர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏராளமான உதவிப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடமிருந்தும் பல மாவட்ட நிர்வாகங்களிடமிருந்தும் ஏராளமான நிவாரணப் பொருட்கள் டெல்டாவுக்கும், புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டன. பட்டுக்கோட்டை ஏரிப்புறக்கரை கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர். சந்திரசேகர் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தினார். இதேபோல் வேதாரண்யத்தில் இருந்து பேராவூரணி வரை அனைத்து பகுதிகளிலும் மக்கள் மன்றத்தினர் உதவிகள் செய்தனர். இன்று (டிசம்பர் 7) கூட ரஜினி மக்கள் மன்றத் தலைமை சார்பாக ராஜசேகர் திருச்சி வந்து புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஆய்வு செய்துவருகிறார்.

கோடிக்கணக்கில் உதவிகள் செய்தும் ரஜினி நேரடியாக வரவில்லையே என்று டெல்டா மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். ரஜினி வந்து அவர் கையால் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும், பல சின்னச் சின்னத் தலைவர்கள் எல்லாம் வந்துபோகிறார்கள். கமல்ஹாசன் பல முறை வந்து பார்த்துவிட்டுப் போனார். பாலிவுட் நடிகர்கள், கேரள முதல்வர் என்று பேசி நிவாரண உதவிகளை வாங்குகிறார். ஆனால் நமது தலைவர் ரஜினி ஏன் டெல்டாவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று அம்மாவட்ட நிர்வாகிகள் தலைமை மன்றத்தைக் கேள்விகளால் துளைத்துவிட்டனர்.

இதையெல்லாம் தலைமை நிர்வாகிகள் ரஜினியிடம் தெரியப்படுத்தியுள்ளனர். ’நாம அனுப்பிச்ச பொருட்கள் எல்லாம் மக்கள்கிட்ட போயிட்டிருக்குல்ல... நான் போறது முக்கியமில்ல’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நிர்வாகிகள் மக்கள் மன்றத்தின் டெல்டா நிர்வாகிகளின் குமுறல்களை ரஜினியிடம் கொட்டியிருக்கிறார்கள்.

’பணமும் பொருட்களும் பல பேரு கொடுத்துக்கிட்டிருக்காங்க. பணத்தைத் தாண்டின உதவிகளையும் செஞ்சுக்கிட்டிருக்காங்க. நாம கட்சி ஆரம்பிக்கப் போறதா அறிவிச்சு ஒரு வருஷம் ஆகப் போகுது. நாம கட்சி ஆரம்பிச்சு தேர்தலுக்காக அங்க போகும்போது, புயலடிச்சப்ப வராத ரஜினி இப்ப எதுக்கு வர்றாரு’னு கேள்வி வரும். அதுக்காகவாவது நீங்க ஒருமுறை வந்துட்டு போனா நல்லது’ என எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கேட்ட ரஜினி புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்க நவம்பர் கடைசி வாரத்திலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் சில நாட்களிலேயே, ‘தலைவர் இப்ப வரலை. நீங்க உதவிகளைத் தொடர்ந்து செய்யுங்க’ என்று தகவல் வந்திருக்கிறது.

டெல்டா பயணத்துக்குத் திட்டமிட்ட ரஜினி ஏன் ரத்து செய்ய வேண்டுமெனப் புதுக்கோட்டை மற்றும் சில டெல்டா மாவட்ட ரஜினி மன்றத்தினரிடம் விசாரித்தால் வேறு மாதிரி சொல்கிறார்கள். ‘ரஜினி புதுக்கோட்டையிலயும் டெல்டா மாவட்டங்களுக்கும் போக தயாராயிட்டாரு. ஆனா திடீர்னு சில பேர் அவர் மனசை மாத்திட்டாங்க. பிரைவேட் டிடெக்டிவ் மூலமா கிடச்ச ரிப்போர்ட்னு சொல்லி ரஜினிகிட்ட ஒரு ரிப்போர்ட்டை கொடுத்திருக்காங்க. அதுல டெல்டாவுக்குப் போனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சமயத்துல போனப்ப நடந்த மாதிரிதான் நடக்கும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிக்க புதுக்கோட்டை மாவட்டத்துல சிறு சிறு அமைப்புகள் சார்பா திட்டமிட்டிருக்காங்க. அதனால உடனடி விசிட்டை ரத்து பண்ணிட்டு, சில வாரங்கள் கழித்து டெல்டா மக்களுக்கு தொலை நோக்குத் திட்டத்திலான உதவிகளை ரஜினி நேரடியாக வந்து மேடை போட்டு அறிவிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ரிப்போர்ட்தான் ரஜினியின் டெல்டா விசிட்டை ரத்து பண்ண வைத்திருக்கிறது” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

இதைப் படித்துவிட்டு லைக் போட்ட ஃபேஸ்புக், “கஜா புயல் பாதிப்பால் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரஜினி ரத்து செய்துள்ளார் என்றும் கொண்டாட்டங்களுக்கு பதில் அம்மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்றும் மன்றத்தினருக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினி சார்பில் அறிக்கை தயாராகிவருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.

வெள்ளி, 7 டிச 2018

அடுத்ததுchevronRight icon