மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

விஸ்வாசம்: தொடங்கியது பிசினஸ்!

விஸ்வாசம்: தொடங்கியது பிசினஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. அதே நாளில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையை கேஜேஆர் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பை சன் டிவி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ராட்சசன், சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் உரிமைகளையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் உருவான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றாலும் முதல் பாகம் அளவுக்கு ஈர்க்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

ரசிகர்களிடையே வரவேற்பு பெறும் படங்களை சன் டிவி நிறுவனம் தொடர்ச்சியாகக் கைப்பற்றி வருகிறது. அதே நேரத்தில் 96 படத்தின் உரிமையைப் பெற்றிருந்த அந்நிறுவனம் திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாய் ஓடிக்கொண்டிருக்கும்போதே சன் டிவியில் ஒளிபரப்பியது விமர்சனத்துக்குள்ளானது. த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் படத்தைப் பின்னர் ஒளிபரப்ப வேண்டுகோள் வைத்தும் தீபாவளி அன்று படத்தை ஒளிபரப்பினர். சர்கார் படத்திற்காக தியேட்டர்களைக் கைப்பற்றுவதாக படம் ஒளிபரப்பப்பட்டதாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon